வெள்ளவத்தையிலுள்ள ஓர் ஒழுங்கையில் தமிழ்ப் பெண்மணியொருவர் நடந்து சென்றுகொண்டிருக்கையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் `லபக்'கென அவரின் தாலிக் கொடியைப் பிடித்து அறுத்துக்கொண்டு ஓட முயற்சித்தனர்.
அந்தப் பெண்மணியோ, ஆவேசத்துடன் தாலிக் கொடியை இறுகப் பிடித்துக் கொண்டு இழுபறிப்பட்ட வண்ணம் கூக்குரல் எழுப்பவே, சனங்கள் ஓடிவந்தனர். இதனால் அந்தக் கொள்ளையர்களின் முயற்சி பலிக்கவில்லை. ஆனால், பெண்மணிக்கு உரசல் காயங்கள் ஏற்பட்டுவிட்டன.
அந்தப் பெண்மணியின் வீரத்தை சிலர் பாராட்டினார்கள். அந்தநேரம், சிலர் அவரை குறைசொல்லத் தொடங்கிவிட்டனர். "தாலிக் கொடியை அணிந்துகொண்டு தன்னந்தனியாக ஒழுங்கைக்குள் இவர் நடந்து செல்லலாமா? இது முடிச்சுமாறிகளை வலிய அழைப்பதைப் போல் இருக்காதா?" என்றெல்லாம் பேசத் தொடங்கிவிட்டனர்.
இத்தகைய எத்தனையோ சம்பவங்கள் நிகழ்ந்திருந்தும் பல தமிழ்ப் பெண்மணிகள் தாலி, தங்கச் சங்கிலி அணிந்து தனியே செல்வதை நிறுத்தியபாடாயில்லை. இனியாவது திருந்துவார்களா?