நாட்டில் ஆங்கில ஆசிரியர் தட்டுப்பாடு அதிகரித்துக் காணப்படுவதாகவும் கல்விப்பீடங்களில் ஆங்கிலக் கல்வியை போதிப்பதற்கான போதனாசிரியர்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நாட்டிலுள்ள கல்விப் பீடங்களில் ஆங்கில மொழிமூல பாடத்திட்டங்களுக்கு அமைவான எட்டுப்பாடங்களைப் போதிப்பதற்கான போதனாசிரியர்கள் இல்லாமை காரணமாக ஆங்கில மொழிமூல பயிலுநர் ஆசிரியர்கள் பெரும் இக்கட்டான நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர். விஞ்ஞானம், கணிதம், உடற்கல்வி, தகவல் தொழில்நுட்பம், மேலைத்தேய இசை, சமூக விஞ்ஞானம் ஆகிய பாடங்களை ஆங்கில மொழிமூலம் கற்பிப்பதற்காக பல வருடங்களாக போதனாசிரியர்கள் சேர்த்துக்கொள்ளப்படாமை காரணமாகவே இத்தகைய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
அனைத்துப் பாடசாலைகளிலும் ஐந்தாம் ஆண்டு முதல் ஆங்கிலம் கற்பிக்கப்பட வேண்டுமெனவும் ஆங்கில மொழியின் முக்கியத்துவம் பற்றியும் பொறுப்பு வாய்ந்தவர்கள் நீண்டகாலமாகவே கூறிவருகின்ற போதிலும் அதற்குகந்த சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை. இத்தகைய பொறுப்பற்ற போக்கு காரணமாக கல்விப்பீடங்களில் ஆங்கில மொழிமூலம் பயிற்சி பெறும் ஆசிரிய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 1956 ஆம் ஆண்டில் சிங்களத்தை அரச கருமமொழியாக பிரகடனப்படுத்திய அரசாங்கம், அதனைத் தொடர்ந்து சில காலத்தின் பின்னர் தமிழையும் அரச கரும மொழியாக ஏற்றுக்கொண்டது. இதன் காரணமாக சிங்கள பாடசாலைகளில் சிங்களமும் தமிழ் மொழிப் பாடசாலைகளில் தமிழ் மொழியும் மட்டுமே கற்பிக்கப்பட்டன. காலப்போக்கில் ஆங்கிலமொழி மூலக் கல்வி அப்பாடசாலைகளில் இல்லாதுபோகும் நிலை ஏற்பட்டது.
வசதி படைத்தவர்களும் நகர்ப்புறத்துப் பிள்ளைகளும் ஆங்கில மொழியை பெற்றுக்கொள்ளும் போது கிராமப்புறத்து ஏழைப் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் எட்டாக் கனியாகிப்போனது. அண்மைக் காலமாக ஆங்கிலத்தின் தேவை உணரப்பட்டதால் மீண்டும் ஆங்கில மொழியை கற்பிக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. அதற்காக கல்விப்பீடங்களில் ஆங்கில மொழி ஆசிரியர் பயிற்சிக்கான பாடத்திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இந்தக் கல்விப்பீடங்களில் ஆங்கில மொழி போதனாசிரியர்களை நியமிப்பதில் அரசு உரிய அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை. கல்விப்பீடங்களில் 1,117 ஆங்கில மொழி போதனாசிரியர்களுக்கு வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. உரிய காலத்தில் இந்த நியமனங்களை மேற்கொள்ள அரசு தவறியதன் காரணமாக எமது எதிர்கால சந்ததியின் கல்வித்துறை மிகமோசமாக பாதிக்கப்படும் நிலை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது.
ஆங்கில கல்வி முன்னேற்றம் பற்றியும் போதனாசிரியர் நியமனம் குறித்தும் அதிகார மட்டத்தில் தொடர்ச்சியாக கூடிப்பேசிக் கலைவதோடு காரியம் முடிந்துவிடுகிறது. வெறுமனே நேரம் வீணாக்கப்படுகிறது. சரியான வேலைத் திட்டம் மேற்கொள்ளப்படாமை காரணமாக ஆங்கில மொழி போதனாசிரியர்களை நியமிப்பதில் தாமதங்களும் தடைகளும் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றது. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் 2005 ஆம் ஆண்டில் ஆங்கில மொழி போதனாசிரியர்களுக்கான நேர்முகப்பரீட்சை நடத்தப்பட்டபோதிலும் இன்றுவரையில் அதன் முடிவுகள் வெளியிடப்படவுமில்லை, நியமனங்கள் வழங்கப்படவுமில்லை. இதன்மூலம் நிருவாகத்தின் இலட்சணம் எப்படி அமைந்துள்ளது என்பதை ஊகித்துக் கொள்ள முடியும். தமிழும் சிங்களமும் அரச கரும மொழிகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதிலும் ஆங்கில மொழியின் தேவையை எவராலும் புறக்கணித்து விட முடியாது. உள்நாட்டிலாக இருப்பினும், சர்வதேச மட்டத்திலாயினும் ஆங்கில மொழி இன்றைய அவசியப்பாடாகியுள்ளது. தகவல் தொழில்நுட்பமும் கணினித் தொழில்நுட்பமும் விரிவடைந்து வரும் நிலையில், ஆங்கில மொழி அத்தியாவசியமானதொன்றாகவே காணப்படுகின்றது.
எமது பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ஆங்கில மொழிக் கல்வியை அவர்களுக்கு வழங்க வேண்டுமென்ற அவாவுடன் பெற்றோர்கள் காணப்படுகின்றனர். வசதிபடைத்த பெற்றோர் தமது பிள்ளைகளை தனியார் கல்விக் கூடங்களுக்கு அனுப்பி பெருந்தொகைப் பணத்தைச் செலவிட்டு ஆங்கிலக் கல்வியைப் பெற்றுக் கொடுக்கின்றனர். நாட்டின் பொருளாதார நிலைமை காரணமாக வறிய மக்களால் அப்படிச் செய்ய முடியாத நிலையே காணப்படுகின்றது. வாழ்க்கைச் செலவு மலைபோல் உயர்ந்து காணப்படுகிறது. ஒரு கால கட்டத்தில் தமது பிள்ளைச் செல்வங்களை தனியார் பாடசாலைகளுக்கோ தனியார் வகுப்புகளுக்கோ அனுப்புவது என்பது அவர்களால் சிந்தித்துக் கூடப் பார்க்க முடியாதுள்ளது. எனவே, அரசாங்கத்தின் மீதான கடப்பாட்டை மக்கள் எதிர்பார்க்கின்றனர். காலம் தாழ்த்தாமல் கல்விப்பீடங்களில் காணப்படும் ஆங்கில மொழி போதனாசிரியர் தட்டுப்பாட்டை உடனடியாக நீக்கும் விதத்தில் 2005 ஆம் ஆண்டில் இடம்பெற்ற நேர்முகப் பரீட்சையில் சித்தி பெற்றவர்களை அறிவித்து அவர்களை கல்விப் பீடங்களுக்கு நியமித்து ஆங்கில மொழி போதனையை தடையின்றித் தொடர வழிவகுப்பதோடு, பாடசாலைப் பிள்ளைகளுக்கு ஆங்கிலக் கல்வியைப் பெற்றுக் கொடுப்பதற்குரிய குறுகிய காலத் திட்டத்தையாவது உடனடியாக அமுலுக்குக் கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றோம்.