*சர்தாரி அறிவிப்பு
இஸ்லாமாபாத்; பாகிஸ்தானின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள யூசுப் ராஸா கிலானி அடுத்த 5 ஆண்டுகளுக்கும் அதே பதவியில் நீடிப்பாரென மக்கள் கட்சியின் தலைவர் ஆஸிப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் நடந்த தேர்தலில் பெனாசிரின் மக்கள் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. அது நவாஸ் ஷெரீப்பின் முஸ்லிம் லீக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து ஆட்சியமைத்துள்ளது. இந்தத் தேர்தலில் அந்தக் கட்சியின் தலைவரான ஆசிப் அலி சர்தாரி போட்டியிடவில்லை. இதனால் அவர் பிரதமராக முடியாது.
எனவே, அவர் தனக்குப் பதிலாக தன் நம்பிக்கைக்குரியவரான யூசுப் ரஸா கிலானியை நியமித்தார். இதற்கு முன்பு அளித்த பேட்டியில் புதிய பிரதமர் இடைக்காலப் பிரதமராக மட்டுமே இருப்பார் என்றும், நான் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதும் பிரதமராவேன் என்றும் தெரிவித்தார். இதனால் கிலானியை 3 மாதப் பிரதமர் என்று சிலர் அழைத்தனர். இதை இப்போது ஆசிப் அலி சர்தாரி மறுத்து இருக்கிறார்.
கிலானி 3 மாதங்களுக்கு அல்ல, 5 ஆண்டுகளுக்கும் பிரதமராக நீடிப்பார். மற்றும் அமீன் பாகிமை பிரதமராக நியமிக்காமல் கிலானியைப் பிரதமராக நியமிப்பதற்கான காரணம் என்ன என்பதை நான் கூட்டணித் தலைவர்களிடம் விளக்கியுள்ளேன்.
பிரதமர் ஆவதில் எனக்கு ஆர்வம் இல்லை. கிலானி கட்சிக்கு அதிகம் விசுவாசமானவர். அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தபோது படுக்கை வசதி இல்லாமல் படுத்து உறங்கியவர். எந்த உதவி கேட்டும் செல்வாக்கான நண்பர்களை அவர் தொடர்பு கொண்டதில்லை. ஜெயிலில் 4 ஆண்டுகள் இருந்தபோதும் கட்சிக்கு விசுவாசமாக இருந்தார். என்மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார்.
அதுமட்டும் அல்லாமல் அவர் மிகுந்த நேர்மையானவர், புத்திசாலி மக்களைக் கவரக்கூடிய அளவுக்கு வசீகரமானவர் எனத் தெரிவித்துள்ளார்.