*பிரதி அமைச்சரிடம் முறையீடு
கடந்த ஜனவரி மாதம் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வடபகுதியை சேர்ந்த மூவர் விசாரணைகளின்றி கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக, பெற்றோர் பிரதி அமைச்சர் பெ.இராதாகிருஷ்ணனிடம் புகார் செய்துள்ளனர்.
தம்பாளை அச்சுவேலியை சேர்ந்த மனோகரன் காண்டீபன் (வயது 22), புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த நந்தகுமார் நக்கீரன் (வயது 27), உரும்பிராய் மேற்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சின்ன பொடியன் கிருஷ்ணபிள்ளை (வயது 56) ஆகியோரே கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
யூனியன் பிளேஸிலுள்ள கிரவுன் சலூனில் சகல பதிவுகளுடன் கடந்த 5 வருடங்களாக தொழில் புரிந்து வந்த காண்டீபனை 23.01.2008 இலும், கொம்பனி வீதி விக்டோரியா பேக்கரியில் சகல பதிவுகளுடன் கடந்த 9 வருடங்களாக தொழில் புரிந்து வந்த நக்கீரனை 27.01.2008 இலும் கைது செய்த கொம்பனி வீதி பொலிஸார், கடந்த ஜனவரி 31 ஆம் திகதி சென்றல்ரோட் லொட்ஜிலிருந்து 56 வயதான கிருஷ்ண பிள்ளையையும் கைது செய்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.
குறிப்பிட்ட இளைஞர்களும் முதியவரும் எதுவித விசாரணைகளுமின்றி தடுத்து வைக்கப்பட்டிருப்பதால் அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தங்கள் பிள்ளைகளை விடுவித்து தருமாறும் பெற்றோர் பிரதி அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இவர்களது விடுதலை தொடர்பாக பயங்கரவாத தடுப்பு விசாரணைகள் பிரிவு இயக்குனர் நந்தன முனசிங்கவுடன் பிரதி அமைச்சர் தொடர்பு கொண்டுள்ளார்.