யாழ். மாவட்டத்தில் ஒரு தசாப்தமாக பாதிக்கப்படாதிருந்த நகைவிற்பனைத் தொழிலும் அத்தொழிலில் ஈடுபட்டுள்ள நகை உற்பத்தித் தொழிலாளர்களும் தற்போது பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். உலக சந்தையில் ஒரு கிராம் தங்கம் ஆயிரம் அமெரிக்க டொலராக உயர்ந்திருப்பதால் ஒரு பவுண் தங்கத்தின் விலை குடா நாட்டில் 30 ஆயிரம் ரூபாவரை உயர்ந்துள்ளது. ஒரு பவுண் தங்கம் 3.89 பவுணாகவும் அதன் நிறை கிராம் அளவில் 31.10 கிராமாகவுமுள்ளது.
கடந்த வருடம் ஜூன் மாதம் யாழ்ப்பாணச் சந்தையில் 17 ஆயிரத்து 600 ரூபாவாக விற்கப்பட்ட ஒரு பவுண், இருபத்துநாலு கரட் தங்கம் கடந்த அக்டோபரில் 20 ஆயிரமாக உயர்ந்தது. டிசம்பர் மாதத்தில் திடீரென ஒருபவுண் 21 ஆயிரத்து 600க்கு விற்பனை செய்யப்பட்டது. இவ்வருடம் மார்ச் மாதம் வரை ஒரு பவுண் விலை 27 ஆயிரத்து 500 முதல் 30 ஆயிரம் ரூபா வரை தங்கத்தின் தரத்துக்கு அமைய விற்பனை செய்யப்படுகிறது.
யாழ்ப்பாண மக்கள் தங்க நகைகளை கொள்முதல் செய்வதும் பழைய நகைகளை புதிய டிசைன்களாக செய்வதும் பவுண்விலையேற்றத்தால் பெருமளவு குறைந்துள்ளது. இதனால், நகை வர்த்தர்களும் நகை உற்பத்தி தொழிலாளர்களும் பாதிப்படைந்து வருகின்றனர்.