வடமேல் மாகாணத்திற்குட்பட்ட பாடசாலைகளில் தொடர்ந்தும் 15 வருடத்திற்கும் மேலாகக் கடமையாற்றும் தொண்டர் ஆசிரியர்களுக்கு உதவி ஆசிரியர் நியமனம் வழங்குவது நீண்ட காலமாக இழுத்தடிக்கப்படுவதை சுட்டிக்காட்டி ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை வடமேல் மாகாணசபை உறுப்பினர் எஸ்.ஏ.எஹியா அனுப்பி வைத்துள்ளார்.
குருநாகல், புத்தளம் மாவட்டங்களில் கஷ்ட மற்றும் அதிகஷ்ட பாடசாலைகளில் எதுவித வேதனமும் இன்றி இதுவரை காலமும் தொண்டர் ஆசிரியர்களாக சேவை செய்கின்றபோதிலும் இன்றுவரை இவர்களுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கப்படவில்லை. இதனை சுட்டிக்காட்டி ஜனாதிபதி, வடமேல் மாகாண முதலமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
ஏனைய மாகாணங்களான வடமத்திய மாகாணம், ஊவா மாகாணங்களில் தொண்டர் ஆசிரியர்களுக்கு உதவி ஆசிரியர் நியமனங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளபோதிலும், வடமேல் மாகாணத்தில் இதுவரை தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க ஏற்பாடு எதுவும் செய்யப்படாத காரணத்தைக் குறிப்பிட்டு இதனை உடனடியாக ஜனாதிபதி தலையிட்டு நியமனம் வழங்க உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு மகஜர் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.