இலங்கைப் போக்குவரத்துச் சபையின் யாழ்ப்பாணம், பருத்தித்துறை, காரைநகர் டிப்போக்களுக்குத் தேவையான ரயர்கள், ரியூப்புகளை கப்பல் மூலம் யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வருவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக யாழ்.மாவட்டத்தில் போக்குவரத்துச் சேவைகளில் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன.
நாற்பதிற்கும் அதிகமான பஸ்கள், ரயர், ரியூப் மாற்றவேண்டிய நிலையில் சேவையில் ஈடுபடுத்த முடியாமல் டிப்போக்களில் தரித்து நிற்பதால் மட்டுப்படுத்தப்பட்ட சேவையினையே தாம் வழங்கக்கூடியதாகவிருப்பதாக வட பிராந்தியப் போக்குவரத்துச்சபை உதவிப் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
நெருக்கடியான சூழ்நிலைகளில் பாடசாலை பஸ் சேவைகளையும் மற்றைய சேவைகளையும் முடிந்தளவில் நடத்தி வருவதாகவும் தாமதங்களுக்கு மக்களிடம் மன்னிப்புக் கேட்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விரைவிலே பஸ்களிற்கான ரயர்கள், ரியூப்புகள் வந்துசேரவிருப்பதால் வழமையான சேவைகள் ஆரம்பமாகுமெனவும் அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.