*எஸ்.பி.திஸாநாயக்கா கூறுகிறார்
எம்.ஏ.எம்.நிலாம்
அராஜக ஆட்சியை ஒழித்துக்கட்ட தொடர்ச்சியான வீதிமறியல், சத்தியாக்கிரகப் போராட்டங்களை நாடு முழுவதும் ஒரே நாளில் ஆரம்பிக்கும் மக்கள் பேரணியில் பத்து இலட்சம் பேரைக் கலந்துகொள்ளச் செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி.திசஸாநாயக்கா நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
அடுக்களை யுத்தத்தின் எதிர்ப்பை சட்டி மூடிகளை உடைத்து அரசுக்கு உணர்த்தப்போவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகமான ஷ்ரீ கொத்தாவில் நேற்று நடைபெற்ற மக்கள் சக்திப்படை ஆரம்ப நிகழ்வில் உரையாற்றுகையிலேயே எஸ்.பி.திஸாநாயக்கா இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடந்து பேசுகையில் கூறியதாவது;
இன்று நாட்டில் ஊழலும் மோசடியும் கொடிகட்டிப் பறக்கிறது. அரசாங்கம் தட்டிக்கேட்க ஆளில்லை என்ற நிலையில் ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது. அரசு திருந்துவதற்கு மக்கள் போதுமான கால அவகாசத்தைக் கொடுத்திருந்தும் அரசு திருந்துவதாகத் தெரியவில்லை. அரசாங்கம் வழங்கிய உத்தரவாதம் மார்ச்சுடன் முடிவடைகிறது. மக்கள் வழங்கிய காலக்கெடுவும் முடிகிறது.
அரசை வீட்டுக்கு அனுப்பும் போராட்டத்தை எதிர்வரும் 3 ஆம் திகதி ஆரம்பிக்கிறோம். அன்றைய தினம் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் வீதிமறியல், சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தப்படும்.
பெண்கள் அடுக்களையில் எதிர்கொள்ளும் கஷ்டங்களை வெளியே கொண்டுவந்து காட்டத் தயாராகிவிட்டனர். வாழ்க்கைச் செலவு, பொருட்களின் விலை அதிகரிப்பு தாங்க முடியாத நிலையில் காணப்படுவதை அரசுக்கு உணர்த்தும் பொருட்டு சமையல் பாத்திரங்களான சட்டி, முட்டிகளை வீதியில் போட்டுடைத்து தமது எதிர்ப்பைக் காட்டவிருக்கின்றனர்.
மக்கள் சக்திப் படையினர் வீடு வீடாகச் சென்று மக்களுக்கு நிலைமைகளை விளக்கிக்கூறி பாரிய ஊர்வலத்தில் இலட்சக்கணக்கான மக்களை அணிதிரட்டுவர்.
இன்று எமது பாராளுமன்றம் கேளிக்கைக்குரிய இடமாக மாறியுள்ளது. அதற்குரிய கௌரவம் இழந்துபோயுள்ளது. மக்கள் பலமில்லாத ஜே.வி.பி.அன்று 8 பேருடன் பாராளுமன்றம் வந்தது. கடந்த தேர்தலில் சுதந்திரக் கட்சியின் வாக்கு வங்கி மூலம் 39 பேராக உயர்த்திக்கொண்டுள்ளது.
அதேபோன்று ஹெல உறுமயவில் மிஞ்சிப்போனால் ஒருவர்தான் வந்திருக்க முடியும். சுதந்திரக் கட்சியின் தயவால் 8 பேர் வந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட பின்விளைவுகளை மக்கள் இன்று நன்றாக அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர். இதற்கு முடிவுகட்டும் நாள் மிக நெருங்கிவிட்டது. மக்கள் சக்தியை, பலத்தை விரைவில் காண்பிப்போம் என்றார்.