*கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவிப்பு
கல்விப்புலத்தைப் பற்றித் தெரியாதவர்கள் எடுக்கும் சில பிழையான முடிவுகள் காரணமாகவே இன்று முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பதில் பல்வேறு குழப்ப நிலைகள் ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த தெரிவித்துள்ளார்.
அண்மையில் அக்குறணை அஸ்ஹா தேசிய பாடசாலையில் இடம்பெற்ற நூற்றாண்டு பரிசளிப்பு வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
2009 ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பதில் புதிய திட்டமொன்று கொண்டுவரப்படவுள்ளது. கல்விப்புலத்தை பற்றி நன்கு அறிந்தவர்கள் பலரைக் கொண்ட குழுவின் மூலம் இதற்கான ஆலோசனைகளைப் பெற்று பாராளுமன்றத்தில் சட்டமூலமொன்று சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இந்த அரசு பதவிக்கு வந்த பின்னர் கிழக்கு மாகாணத்தில் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டப்பட்டுவிட்டது. இதேவேளை, 18 ஆயிரம் பட்டதாரிகளுக்கும் 3,179 தோட்டப்புற ஆசிரியர்களுக்கும் 6 ஆயிரம் கல்வியியற் கல்லூரி மாணவர்களுக்கும் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் 27 ஆயிரம் பேருக்கு மேற்பட்டவர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த அரசு பதவிக்கு வரும் போது 95 இலட்சமாக இருந்த அரச ஊழியர் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.
இன்று அரசுடன் உள்ள அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களாகவோ பிரதி அமைச்சர்களாகவோ உள்ளதாகத் தெரிவித்த அவர் இந்த அளவு முஸ்லிம் அமைச்சர்களை எந்தவொரு அரசும் நியமிக்கவில்லை எனத் தெரிவித்தார்.
சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பைசல் முஸ்தபாவும் இவ்வைபவத்தில் உரையாற்றினார்.