இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளராக த.மகாசிவம் செயற்படுவதற்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மாவட்ட நீதிபதி சந்திரமதி சிவபாதம் நேற்று புதன்கிழமை இத்தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளதுடன் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் தொடர் செயற்பாடுகளுக்கும் அனுமதி வழங்கியுள்ளார்.
தமிழர் ஆசிரியர் சங்க அங்கத்தவர் சிலர் மகாசிவம் ஓய்வுபெற்ற பின்னரும் சங்கத்தில் பொதுச் செயலாளராகச் செயற்பட்டு வருவதாகவும் இது சங்கத்தின் யாப்பு சட்ட விதிகளுக்கு முரணானதென திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இம்மனு மீதான விசாரணைகள் நேற்று நீதிமன்றத்தில் நடைபெற்றுள்ள போதே மகாசிவம் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளராக செயற்படுவதற்கு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு விதித்துள்ளது.
மனுதாரர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி இ.தம்பையா ஆஜராகியுள்ளார். நீதிமன்றில் விசாரணை நடைபெற்ற சமயம் சங்கத்தின் முக்கியஸ்தர்கள் சிலரும் அங்கு சமுகமளித்திருந்தனர்.
இம்மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் ஜூன் மாதம் 25 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.