*இரத்தினபுரி பிரதான வீதியில் சம்பவம்
வேவல்வத்தை- இரத்தினபுரி பிரதான வீதியில் நேற்று புதன்கிழமை மாலை ஆட்டோவொன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதுடன், 3 பேர் படுகாயமடைந்த நிலையில் இரத்தினபுரி வைத்திய சாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக வேவல்வத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தமது வேண்டுதல் ஒன்றை நிறைவேற்றும் பொருட்டு வேவல்வத்தையிலிருந்து இரத்தினபுரி சமன் தேவாலயத்திற்கு ஆட்டோவில் சென்ற போதே அமுனுதென்ன எனுமிடத்திலுள்ள சுமார் 30 அடி பள்ளத்தில் பாய்ந்தது.
இதில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் கல்வேல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலைக்குக் கொண்டு வரும் போது ஒருவர் உயிரிழந்தார்.
ஒரு பிள்ளையின் தந்தையும் இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் தாதியாகப் பணிபுரிபவருமான உபாலி ரணசிங்க (41 வயது) என்பவரே உயிரிழந்தவராவார்.
இவரது மனைவி, தாய், மகள் 3 பேரும் படுகாயமடைந்த நிலையில் இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து வேவல்வத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆட்டோவை உயிரிழந்தவரே செலுத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.