கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கட்சி, சுயநல அரசியல், கொள்கை வேறுபாடுகளை மறந்து சகல முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஒரு அணியில் இணைந்து வேட்பாளர்களை நிறுத்தி தேர்தலில் போட்டியிடுமாறு இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவ சமூகம் அழுத்தம் கொடுத்துள்ளது.
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகம் முன்பாக நேற்று புதன்கிழமை அமைதி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி இந்த அழுத்தத்தை பல்கலைக்கழக மாணவ சமூகம் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்குக் கொடுத்துள்ளது.
நேற்று புதன்கிழமை காலை 8.30 மணிக்கு ஒலுவில் வளாகம் முன்பாகத் திரண்ட ஆயிரத்திற்கு மேற்பட்ட பல்கலைக்கழக மாணவ மாணவியர்கள் அமைதி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
பல்கலைக்கழக மாணவர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த அமைதி ஆர்ப்பாட்டம் பேரவைத் தலைவர் எம்.ஐ.ஏ. அஸ்கர் தலைமையில் நடைபெற்றது.
"சீரழிந்த சமுதாயத்தை உயிர்ப்பிக்க ஒன்றுபடுங்கள்" - "வேற்றுமையை மறந்து கிழக்கு மாகாணத்தை வென்றெடுப்போம்" - "கிழக்கு மக்களின் இருப்பு ஒற்றுமையிலேயே, ஒன்றுபடுவோம்" - "முஸ்லிம் சமுதாயத்திற்காக உங்கள் பிடிவாதத்தை விட்டுக் கொடுங்கள்" - "முஸ்லிம் தலைவர்களே சற்று சிந்தியுங்கள்" - "சுயநலத்தை மறந்து சுயநிர்ணயத்தை வென்றெடுப்போம்" - "சுயநலம் வேண்டாம் சுயநிர்ணயம் வேண்டும்"- - என்பன போன்ற வாசகங்களைக் கொண்ட சுலோக அட்டைகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் ஏந்தியிருந்தனர்.
மேற்படி ஆர்ப்பாட்டம் குறித்து இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் எம்.ஐ.ஏ. அஸ்கர் கருத்துத் தெரிவிக்கையில்;
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்களுக்கு ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இன்றைய அமைதி ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்து நடத்தினோம்.
கடந்த 20 வருடகாலமாக முஸ்லிம் மக்கள் பட்டுவந்த துன்ப துயரங்களை நிவர்த்தி செய்வதற்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தல் சந்தர்ப்பமாகி இருக்கின்றது.
முஸ்லிம்கள் இந்த மாகாண சபையைச் சிறந்த சந்தர்ப்பமாகப் பயன்படுத்தக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
எமது முஸ்லிம் அரசியல் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் பல பிரிவுகளாக பிரிந்து நிற்பது பெரும் பாதிப்பாகும். எனவே, சகல முஸ்லிம் அரசியல் தலைமைகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றுசேர்ந்து, முஸ்லிம்களின் நலனுக்காகவும், உரிமைகளைப் பெற்றுக்கொள்ளவும், சுயநிர்ணய மாகாண சபை அதிகாரத்தை உறுதிப்படுத்தி, முஸ்லிம்களின் தனித்துவத்தைப் பாதுகாக்க முன்வர வேண்டும்".
இதுவே எமது பல்கலைக்கழக மாணவர் சமூகத்தின் கோரிக்கையாகும்" என்றார்.