*இறுதித் தீர்மானம் எடுக்க முடியாமல் கட்சிகள் தடுமாற்றம்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கவுள்ள கட்சிகள் ஒவ்வொன்றும், ஏனைய கட்சிகள் எத்தகைய தீர்மானம் எடுக்கப்போகின்றார்கள் என்பது தொடர்பாக அறியவருகிறது.
கிழக்கு தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வது இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகியுள்ளபோதிலும் இதுவரை கட்சிகளிடையே தேர்தல் உடன்பாடு மற்றும் கூட்டணி தொடர்பில் இறுதி இணக்கப்பாடுகள் எட்டப்படவில்லை.
தேர்தலில் களமிறங்கியுள்ள சகல கட்சிகளும் ஒன்றையொன்று தங்கியுள்ள சூழ்நிலையில் ஏனைய கட்சிகள் மேற்கொள்ளவுள்ள தீர்மானங்களுக்கேற்ப தாமும் வியூகங்களை வகுக்க காத்திருக்கின்றன.
ஆளும் தரப்பு நேற்று புதன்கிழமை தேர்தல் தொடர்பில் முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளவிருந்த போதும் எதிர்வரும் சனிக் கிழமை வரை இறுதித் தீர்மானம் மேற்கொள்வது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சின் இத்தீர்மானத்தை அறிந்து கொண்ட ஐ.தே.க. மற்றும் முஸ்லிம் காங்கிரஸும் இவ்வாறே தேர்தல் தொடர்பில் தமது தீர்மானத்தை அறிவிப்பதில் காலம் தாழ்த்தியுள்ளன.
ஆளும் ஐக்கிய சுதந்திர முன்னணியிலுள்ள பல்வேறு பங்காளி கட்சிகளும் தேர்தல் தொடர்பில் இறுதித் தீர்மானத்தை இதுவரை மேற்கொள்ளவில்லை.
இதேவேளை பிரதான இரு கட்சிகளும் ஏனைய சிறு கட்சிகளை தம்முடன் இணையுமாறு வலியுறுத்தி வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.