*அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையிலான குழு நியூயோர்க் பயணம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து வெளியேற்றப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள இலங்கை, அதனை தவிர்த்துக் கொள்வதற்கான தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க இந்த விடயம் தொடர்பாக அவசர விஜயமொன்றை மேற்கொண்டு நியூயோர்க் சென்றுள்ளார்.
எதிர்வரும் மே மாதம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆசிய நாடுகளுக்கான அங்கத்துவத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 2006 இல் நடைபெற்ற தேர்தல் மூலம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்புரிமையை இலங்கை பெற்றுக் கொண்டது.
எனினும், தற்போது நாட்டில் மிக மோசமாக அதிகரித்துள்ள மனித உரிமைகள் மீறல், ஆட்கடத்தல், காணாமல் போதல் மற்றும் துணை ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் சர்வதேச சமூகத்தின் கடும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளன.
அத்துடன், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு அங்கத்துவம் வழங்குவது தொடர்பாக ஆணைக்குழு மீள்பரிசீலணை செய்ய வேண்டுமென ஐரோப்பிய நாடுகள் பலவும் வலியுறுத்தியுள்ளன.
இந்நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து வெளியேற்றப்பட்டால் அது சர்வதேச சமூகத்தின் உதவிகள் குறைவடைய வழிவகுப்பதுடன், நாட்டுக்கு தலைகுனிவையும் ஏற்படுத்துமென அரசாங்கம் பாரிய கவலை கொண்டுள்ளது.
இதனைக் கவனத்திற் கொண்டே அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையிலான குழு நியூயோர்க் சென்று ஐ.நா.வின் 30 க்கும் மேற்பட்ட தூதுவர்களை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக அறிய வருகிறது.
பேராசிரியர் பீரிஸ் உள்ளிட்ட குழுவினரும் நியூயோர்க் மற்றும் ஜெனீவா சென்று பிரசார பணியில் ஈடுபடவுள்ளனர்.
இதேவேளை, ஐ.நா.சபையில் தற்போது 192 நாடுகளுக்கும் மேல் அங்கத்துவம் வகிக்கின்றன. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அங்கத்துவம் பெற இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும்.இவ்வாக்கெடுப்பில் இலங்கை 125 முதல் 130 வாக்குகள் பெற்றாலே அங்கத்துவம் நீடிக்கப்படும்.