கிழக்கு மாகாண சபைக்குரிய தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் இன்று வியாழக்கிழமை தொடக்கம் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய முடியுமென தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்தது.
இதுகுறித்து மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சுமணசிறி தகவல் தருகையில்;
கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் இன்று முதல் மாவட்ட செயலகங்கள் ஏற்றுக் கொள்ளும் . அரசியல் கட்சிகள் எதிர்வரும் 3 ஆம் திகதி வரையும் சுயேச்சைக் குழுக்கள் 2 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரையும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.
வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும்போது மாவட்ட செயலகங்களுக்கு குழுக்களாகவும், ஆரவாரமாகவும் செல்வதைத் தவிர்ப்பது அநாவசிய பதற்றங்களைக் குறைக்க உதவும்.
தேர்தல்கள் திணைக்களம் மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கும், மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்கியுள்ளது.
அதனடிப்படையில் தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்திலும் தேர்தல் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் திணைக்கள உதவி ஆணையாளர் ரி.கிருஷ்ணானந்தலிங்கம் கூறுகையில்;
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேச்சைக் குழுவொன்று 28 ஆயிரம் ரூபாவை மாவட்ட செயலகத்தில் கட்டுப்பணமாகச் செலுத்துவதன் மூலம் தேர்தலில் போட்டியிட முடியும்.
மட்டக்களப்பில் இம்முறை தேர்தலுக்காக 362 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளன. மாவட்டத்தில் 3 இலட்சத்து 30 ஆயிரத்து 950 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 2006 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின்படி தேர்தல்கள் நடைபெறும் என்றார்.