சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்து சர்ச்சைக்குரிய திரைப்படம் தயாரித்த இலங்கையை சேர்ந்த துஷார பீரிஸ் என்ற இயக்குநர் சென்னையில் தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது;
இலங்கையைச் சேர்ந்த துஷார பீரிஸ் என்பவர் பிரபாகரன் என்ற பெயரில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்துப் படம் எடுத்துள்ளார். இப்படத்தை சிங்களத்தில் எடுத்துள்ள அவர், படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் மற்றும் பிரிண்ட் போடுவதற்காக சென்னைக்கு வந்துள்ளார்.
கே.கே.நகரில் உள்ள ஜெமினி கலர் ஆய்வு கூடத்தில் பிரிண்ட் போடும் பணி நடந்து வருகிறது. இந்தத் தகவல் தமிழர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களுக்குத் தெரிய வந்தது. இதையடுத்து திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சு.ப.வீரபாண்டியன், இயக்குநர் சீமான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செய்தித் தொடர்பாளர் வன்னியரசு உள்ளிட்டோர் தலைமையில் 50 க்கும் மேற்பட்டோர் ஜெமினி ஆய்வு கூடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர்.
ஆய்வுகூடம் முன்பு கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரபாகரன் பட பிரிண்ட் போடும் பணியை நிறுத்த வேண்டும் என்று கோரி கோஷமிட்டனர். இதையடுத்து இயக்குநர் பீரீஸ், தமிழர் அமைப்பினரை சமாதானப்படுத்துவதற்காக வெளியே வந்தார்.
அப்போது கூட்டத்தில் இருந்த சிலர் பீரிஸ் மீது பாய்ந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால் பீரீஸ் அதிர்ச்சி அடைந்தார். அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் பொலிஸார் விரைந்து வந்தனர். தமிழர் அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து இன்று வியாழக்கிழமை பா.ம.க.நிறுவுனர் டாக்டர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோருக்குப் படத்தைப் போட்டுக் காட்டுவது, அவர்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் பிரிண்ட் போட்டுக் கொடுத்து இலங்கைக்கு அனுப்புவது என்ற முடிவுக்கு அனைவரும் வந்தனர்.
இதையடுத்து இன்று பிரபாகரன் படத்தை ராமதாஸும், திருமாவளவனும் பார்க்கவுள்ளனர். தமிழ் உப.தலைப்புடன் படம் காட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் பிரபாகரன், தமிழர்களின் போராட்டம் குறித்து தவறான முறையில் சித்திரிக்கப்பட்டுள்ளதாக கருத்து பரவியுள்ளது.