வவுனியா ஓமந்தை பகுதியில் இராணுவ முன்னரங்க காவல் நிலைகளுக்கு அருகில் நேற்று புதன்கிழமை நண்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டதுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இவர்களுடன் வந்ததாகக் கூறப்படும் ஐவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா ஓமந்தையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து தப்பி வந்தவர்களெனக் கூறப்படுவோரே அப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சமருக்கிடையில் சிக்குண்டு கொல்லப்பட்டும் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுவதுடன், ஏனைய ஐவரும் காயமெதுவுமின்றி படையினரால் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்ட மூவரதும் சடலங்களை நேற்று மாலை 6 மணியளவில் வவுனியா ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்த இராணுவ பொலிஸ் அதிகாரிகள் தப்பி வந்தவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியனுக்கு கூறுகையில்;
10.02.2007 ஆம் ஆண்டு புத்தளம் கற்பிட்டியிலிருந்து 3 வள்ளங்களில் 12 மீனவர்கள் விடுதலைப் புலிகளால் கடத்திச் செல்லப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் முரசுமோட்டை, வள்ளிபுனம் பகுதிகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் இந்தப் 12 பேரும் தப்பி வந்துள்ளனர். இதில் ஒருவரால் நடக்க முடியாது போகவே அவரை இடை வழியில் விட்டு விட்டு ஏனைய 11 பேரும் வவுனியாவில் இராணுவ காவலரண்களை நோக்கி வந்துள்ளனர்.
இவர்களைக் கண்ட புலிகள் இவர்கள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தவே, அனைவரும் இராணுவ காவலரண் நோக்கி ஓடி வந்துள்ளனர்.
இவ்வேளையில் இருபக்கங்களிலிருந்தும் கடும் துப்பாக்கிச் சூடு நடைபெறவே அதற்கிடையில் சிக்கி மூவர் உயிரிழந்ததுடன், மூவர் படுகாயமடைந்தனர். தப்பி வந்த ஐவர் படையினரால் கைது செய்யப்பட்டனர்.
நண்பகல் 12 மணிக்கும் ஒரு மணிக்குமிடையில் நடைபெற்ற இந்தச் சம்பவம் குறித்து ஓமந்தைக்கு வலது பக்கமாக சுமார் 2 கிலோ மீற்றர் தூரத்தில் முன்னரங்க பாதுகாப்பு நிலைகளில் கடமையிலிருந்த இராணுவ அதிகாரியொருவர் நீதிபதி முன்னிலையில் கூறுகையில்;
முன்னரங்க காவல் நிலைகளில் நாங்கள் கடமையிலிருந்த போது துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டது. இதையடுத்து பலர் எம்மை நோக்கி ஓடி வந்தனர். தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து எமது காவலரணிலிருந்து 50 மீற்றர் தூரத்தில் மூவர் கொல்லப்பட்டுக் கிடந்தனர், மூவர் படுகாயமடைந்தனர். ஐவர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, இறந்தவர்களான நீர்கொழும்பைச் சேர்ந்த கமிலஸ் பெர்னாண்டோ (41 வயது), சுஜித் சிறிமால் (19 வயது), பத்மகுமார (37 வயது) ஆகியோரது உறவினர்களுக்கு உடனடியாக அறிவித்து சடலங்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, கைதான ஐவரையும் பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு இராணுவப் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.