Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, March 27, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Main News
இரு கட்சி இணக்கப்பாட்டுக்கு மீண்டும் லியாம் பொக்ஸ் முயற்சி
[27 - March - 2008] [Font Size - A - A - A]
* வெளிவிவகார அமைச்சின் அழைப்பில் வருகை; ரணிலுடன் சந்திப்பு

எம்.ஏ.எம்.நிலாம்

இலங்கை இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காண்பதற்கு இரண்டு பிரதான கட்சிகளையும் மீண்டும் ஒன்றுபடுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளும் பொருட்டு பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் லியம் பொக்ஸ் இலங்கை விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

அரசும் பிரதான எதிர்க் கட்சியும் ஒன்றுபட்டுச் செயற்பட்டால் மட்டுமே தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியுமென்பதை 1996 ஆம் ஆண்டில் வலியுறுத்தியிருந்த லியம் பொக்ஸ், 1997 இல் கொழும்பு வந்து அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கவுக்கும் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் உடன்படிக்கையொன்றை ஏற்படுத்தினார்.

இந்த லியம் பொக்ஸ் உடன்படிக்கையை அன்றைய அரசு உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ளத் தவறியதால் அது குறுகிய காலத்துக்குள் செயலிழந்து போனது.

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதில் கூடுதல் அக்கறை காட்டிவரும் லியம் பொக்ஸ், கடந்த நவம்பர் மாதத்திலும் கொழும்பு வந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.

வட, கிழக்குப் பிரச்சினைத் தீர்வுக்கு தெற்கில் காணப்படுகின்ற அரசியல் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தை அன்று உணர்ந்த நிலையிலேயே லியம் பொக்ஸ் சந்திரிக்கா- ரணிலுக்கிடையில் இணக்கப்பாட்டை எடுக்கும் முயற்சியை மேற்கொண்டிருந்தார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இலங்கை விவகாரம் தொடர்பாக லண்டனில் இருக்கும் இலங்கைத் தூதரகத்தில் அறிக்கையொன்றை விடுத்த பின்னரே இந்த இலங்கை விஜயத்தை மேற்கொண்டிருக்கின்றார்.

இரு பிரதான கட்சிகளும் குறிப்பாக அரசும் எதிர்க்கட்சியும் இணைந்தே இனப்பிரச்சினைக்குத் தீர்வு தேட வேண்டியதன் அவசியத்தை அவர் மீண்டும் வலியுறுத்தியிருக்கின்றார்.

லியம் பொக்ஸின் இந்த அறிவிப்புக்கு இலங்கை அரசு சாதகமானதொரு சமிக்ஞையைக் காட்டியிருப்பதாகவே அறியமுடிகிறது. பொக்ஸின் அறிக்கையை அடுத்து இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்த அழைப்பின் பேரிலேயே லியம் பொக்ஸ் மீண்டும் கொழும்புக்கு விஜயத்தை மேற்கொண்டிருக்கின்றார்.

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு லியம் பொக்ஸ் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம, பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கரு ஜயசூரிய, அமைச்சர்கள் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, சம்பிக்க ரணவக்க ஆகியோரைச் சந்தித்து நீண்டநேரம் கலந்துரையாடியிருக்கின்றார்.

நேற்று புதன்கிழமை மாலை எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து தற்போதைய நிலைமைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடியதாக எதிர்க் கட்சித் தலைவர் அலுவலக வட்டாரம் தெரிவித்தது.

மீண்டும் இன்று வியாழக்கிழமை வெளிவிவகார அமைச்சருடன் சந்தித்துப் பேசவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சந்திப்புகளின் பின்னர் அடுத்து எத்தகைய பணியினை முன்னெடுக்கமுடியுமென்று பொக்ஸ் தீர்மானிக்கலாமெனவும் அறியவருகின்றது.

எவ்வாறாயினும் மீண்டுமொரு தடவை அதிகாரத்தரப்பையும் பிரதான எதிர்க் கட்சியையும் ஒன்றுபடுத்தும் முயற்சியை லியம் பொக்ஸ் மீண்டும் மேற்கொள்ள முனைவார் என்று நம்பப்படுகின்றது.

இந்த விஜயத்தின்போது லியம் பொக்ஸ் ஜனாதிபதியை சந்திப்பாராவென வெளிவிவகார அமைச்சிடம் கேட்டபோது, இந்த விஜயத்தின்போது ஜனாதிபதியை சந்திக்கமாட்டாரெனவும் எதிர்காலத்தில் அவர் ஜனாதிபதியை சந்திக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, லியம் பொக்ஸ் இன்று இந்தியாவுக்கு செல்லவுள்ளார். அங்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவாரென அறியவருகிறது.

Email this page Your Opinion Print this page
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com