கடந்த சனிக்கிழமை விடியற்காலை 2.10 மணியளவில் முல்லைத்தீவுக்கும், நாயாறுக்கும் இடைப்பட்ட கடற்பிராந்தியத்தில் வைத்து கடற்கரும்புலிகள் பிரிவினரால் ஸ்ரீலங்கா கடற்படைக்குச் சொந்தமான டோரா அதிவேகப்படகு வெடிக்கவைக்கப்பட்டதாக புலிகள் இயக்கத்தின் `தமிழ்நெற்' இணையத்தளம் அறிவித்திருந்தது.
இவ்வாறு குறித்த சம்பவத்தின்போது புலிகளுக்கும் கடற்படைக்கும் இடையே முற்பகல் இரண்டு மணியிலிருந்து சுமார் 2.45 வரையான முக்கால் மணிநேரம் கடும் மோதல்கள் நிகழ்ந்ததாகவும் இதில் குறைந்தது கடற்படையினர் தரப்பில் 14 படையினரும், புலிகள் தரப்பில் மூன்று கடற்கரும்புலிகளும் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆயினும், கடற்படையினர் தரப்பில் கடற்படை உத்தியோகத்தர்கள் தெரிவித்திருக்கும் தகவல்களில் குறித்த டோரா படகு கடற்கண்ணி குண்டு ஒன்றில் சிக்கியதாலேயே வெடித்துச் சிதறியிருக்கக்கூடும் எனச் சந்தேகம் தெரிவித்துள்ளனர். மேலும் குறித்த கடற்படை அதிகாரிகள் தெரிவிக்கையில் சம்பவ தினம் கடலுக்கடியிலிருந்து மனித ரோபிடோ குண்டு மூலமும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் கூறியுள்ளனர். இதன்போது குண்டை உடலில் கட்டி வந்தோ அல்லது கடலின் மேற்பரப்பில் குண்டை மிதக்கவைத்தோ டோராப்படகு வெடிக்கவைக்கப்பட்டிருக்கலாம் எனவே டோரா படகு வெடித்தது பற்றிய உண்மையான காரணத்தை நிச்சயமாகத் தீர்மானிக்க முடியாத நிலை எழுந்துள்ளதாகவும் கடற்படை தலைமை அலுவலகத்தைச் சேர்ந்த சிரேஷ்ட உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வாறு படகை வெடிக்க வைப்பதற்காக வெடிகுண்டுகள் பைவர்கிளாஸ் உறையில் வைக்கப்பட்டு கடலில் மிதக்கவைக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் தெரிவித்திருக்கும் கடற்படையினர் தற்போது அவ்வாறு வெடித்து கடலிலே சிதறியிருக்கக்கூடிய பைவர்கிளாஸ் துண்டுகளை கடற்படையினர் தேடிக்கண்டுபிடிக்க முடியும் எனவும் குறித்த கடற்படை சிரேஷ்ட உத்தியோகத்தர் கூறியுள்ளார்.
இந்த அனுமானங்களின் அடிப்படையில் படகு வெடிக்கப்பட்டது சம்பந்தப்பட்ட விசாரணைகள் மேற்கொள்ளவதற்கு கடலில் கண்டுபிடிக்கக்கூடிய பைவர்கிளாஸ் துண்டங்கள் நம்பகமான ஆதாரங்களாக இருக்கும் எனவும் கடற் படைத் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு கடந்த சனிக்கிழமை நாயாறு கடற்பரப்பில் வெடிக்கவைக்கப்பட்ட டோரா அதிவேகப்படகின் இலக்கம் 437 ஆகும். இது கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்தால் ஸ்ரீலங்காவில் உற்பத்தி செய்யப்பட்டதாகும்.
லங்காதீப விமர்சனம்: 25/03/2008