மூன்றாவது மற்றும் இறுதி டெஸட் போட்டியில் நியூசிலாந்து அணியை 121 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டுக்கு ஒன்று என்ற ரீதியில் இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை வென்றது.
நெப்பியரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற 553 ஓட்டங்கள் என்ற சாதனை இலக்கை இங்கிலாந்து நிர்ணயித்தது.
கடைசி நாளான நேற்று நியூசிலாந்து அணி 431 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் மொண்டி பனேசர் சிறப்பாக பந்து வீசி 126 ஓட்டங்களை கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இனிங்ஸ் ஒன்றில் பனேசர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பது இது 7 ஆவது முறையாகும்.
நேற்று முன்தினம் 4 ஆம் நாள் ஆட்டம் முடிவடையும்போது நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 222 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. நேற்று 5 ஆம் நாளில் வெற்றிபெற மேலும் 331 ஓட்டங்களைப் பெறவேண்டிய நிலையில் மேலும் 209 ஓட்டங்களையே பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இதில் ரெயிலர் - 74, வெற்றோரி - 43, மக்குலம் -42, சவூத் ஆட்டமிழக்காது -77 ஓட்டங்களைப் பெற்றனர்.
மூன்று போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரில் இங்கிலாந்து அணி ஹமில்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 189 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. எனினும், அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியது.
இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெற்ற போட்டிகளில் தோல்வியைத் தழுவிய இங்கிலாந்து அணிக்கு இந்தத் தொடர் வெற்றி ஆறுதல் தருவதாக அமைந்துள்ளது.
இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகனாகவும், தொடர் ஆட்டநாயகனாகவும் சைற்பொட்டம் தெரிவு செய்யப்பட்டார்.