700 விக்கெட்டுகளை வீழ்த்துவதே அடுத்த இலக்கென இந்திய டெஸ்ட் அணிக் கப்டன் அனில் கும்பிளே தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் நடந்த டெஸ்ட் போட்டியின்போது கும்பிளே 600 ஆவது விக்கெட்டைக் கைப்பற்றினார். அச் சிறப்பைப் பெற்ற முதல் இந்தியர் என்பதற்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை சென்னையில் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடத்தியது.
இந்திய கிரிக்கெட் சபைத் தலைவர் சரத் பவார் அவருக்கு வைரம் மற்றும் இரத்தினத்தால் ஆன கிரிக்கெட் பந்தைப் பரிசாக வழங்கிப் பாராட்டினார்.
ஏற்புரையில் கும்பிளே கூறுகையில்;
கடந்த 17 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாட்டுடன் எனக்குள்ள தொடர்புக்குக் கிடைத்த கௌரவம் இந்த விருது. அதற்காக எனது ஆரம்பக் காலப் பயிற்சியாளர் முதல் என்னுடன் விளையாடிய வீரர்கள் , கப்டன்கள் மற்றும் உறுதுணையாக இருந்த ஒவ்வொருவருக்கும் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளேன்.
குறிப்பாக, எனது குடும்பத்தினருக்கு மிகவும் நன்றி. அவர்கள் தான் நான் விளையாடச் செல்லும்போதெல்லாம் என்னை ஊக்கப்படுத்தினர்.
அடுத்து இந்திய அணி பல தொடர்களில் பங்கேற்கவுள்ளது. அவற்றில் திறமையை வெளிப்படுத்தி 700 ஆவது விக்கெட்டை எட்டும் முயற்சியில் ஈடுபடுவேன் என்றார் கும்பிளே.
முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக சென்னை வந்துள்ள இந்திய தென்னாபிரிக்க வீரர்கள் , முன்னாள் கப்டன்கள், பி.சி.சி.ஐ. நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.