டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சென்னைக்கு தனி இடமுண்டு.
இந்திய அணி டெஸ்டில் அறிமுகமாகி முதல் வெற்றிக்காக 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. அந்த வரலாற்று சிறப்புமிக்க முதல் வெற்றி 1952 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் தான் கிடைத்தது. 1984 ஆம் ஆண்டு இந்திய முன்னாள் கப்டன் கவாஸ்கர் தனது 30 ஆவது டெஸ்ட் சதத்தை அடித்து உலக சாதனை படைத்தது இங்கு தான்.
1986 ஆம் ஆண்டு இந்திய அவுஸ்திரேலிய அணிகளிடையே நடந்த டெஸ்ட் போட்டி கிரிக்கெட்டில் புதிய அத்தியாயத்தை பதிவு செய்தது. 348 ஓட்டங்கள் இலக்குடன் ஆடிய இந்தியா 347 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது. ஆட்டம் யாருக்கும் வெற்றி, தோல்வியின்றி `ரை' ஆனது. டெஸ்ட் வரலாற்றில் `ரை' ஆன 2 ஆவது போட்டி இதுவாகும்.
1999 ஆம் ஆண்டு இந்திய பாகிஸ்தானிடையே நடந்த டெஸ்ட் போட்டி ஒரு நாள் போட்டியையும் மிஞ்சி பரபரப்பாக அமைந்தது யாரும் மறந்திருக்க மாட்டார்கள். 12 ஒட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றாலும், சென்னை ரசிகர்கள் எதிரணிக்கும் தங்களது உற்சாகமான ஆதரவையும், பாராட்டையும் அளித்ததைக் கண்டு பாகிஸ்தான் வீரர்களே நெகிழ்ந்து போனதுண்டு.
* சென்னை சேப்பாக்கம் ஸ்ரேடியம் சுமார் 50 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்டது.
* சென்னை மைதானத்தில் 1934 ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகின்றன. இதுவரை 28 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்தியா 11 இல் வெற்றியும் 6 இல் தோல்வியும் அடைந்துள்ளது. ஒரு டெஸ்ட் `ரை'யிலும், 10 போட்டின் `டிரா'விலும் முடிந்துள்ளன.
* இந்திய தென்ஆபிரிக்க அணிகள் சென்னையில் டெஸ்டில் மோதுவது இதுவே முதல் முறையாகும். ஒரு நாள் போட்டியில் கூட தென்ஆபிரிக்கா இங்கு ஆடியது கிடையாது.
* இங்கிலாந்து அணி 1985 ஆம் ஆண்டு 7 விக்கெட்டுகளுக்கு 652 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது இங்கு அதிகபட்ச ஓட்டமாகும். 1982 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 6 விக்கெட்டுகளுக்கு 566 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது இந்தியாவின் அதிகபட்ச ஓட்டமாகும்.
* இந்திய அணி 1977 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 83 ஓட்டங்களில் சுருண்டது, இங்கு ஓர் அணி எடுத்த குறைந்த ஓட்டம் இதுவாகும்.
* இந்திய முன்னாள் கப்டன் கவாஸ்கர் இங்கு அதிகபட்சமாக 12 போட்டிகளில் விளையாடி 3 சதத்துடன் 1018 ஓட்டங்கள் எடுத்துள்ளார். தனி ஒருவராக அதிக ஓட்டங்கள் எடுத்துவரும் அவர்தான். 1983 ஆம் ஆண்டு மேற்கிந்தியாவுக்கு எதிராக கவாஸ்கர் ஆட்டமிழக்காமல் 236 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
* இந்திய கப்டன் கும்பிளே அதிகபட்சமாக 7 டெஸ்டில் விளையாடி 45 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார். மன்கட், ஹிர்வானி (2 முறை), ஹர்பஜன்சிங் ஆகியோர் தலா 8 விக்கெட்டுகள் வீழ்த்தியதே ஒரு இனிங்ஸில் இங்கு சிறந்த பந்து வீச்சாகும்.
* 1982 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக இந்திய வீரர்கள் விஸ்வநாத், யஸ்பால் ஷர்மா ஆகியோர் 3 ஆவது விக்கெட்டுக்கு குவித்த 316 ஓட்டங்களே இங்கு எடுத்த அதிகபட்ச இணை ஓட்டமாக இதுவரை உள்ளது.
* இங்கு அதிக கட்ச் பிடித்தவர் என்ற பெருமைக்குரியவர் இந்திய வீரர் ராவிட் அவர் 6 போட்டிகளில் 15 கட்ச் பிடித்துள்ளார்.