இந்திய- தென்னாபிரிக்க அணிகளிடையே நேற்று புதன்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பமான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா முதல் இனிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 304 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
நாணயச் சுழற்சியில் வென்று முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர்களான கப்டன் கிரகம்ஸ்மித் மற்றும் மெக்கன்சி ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர்.
அரைச் சதம் அடித்த ஸ்மித் 73 ஓட்டங்களுக்கும் மெக்கன்சி 94 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தனர். ஸ்மித்தைத் தொடர்ந்து களமிறங்கிய அம்லாவும் சிறப்பாக ஆடி ஓட்டங்களை குவித்தார்.
எனினும், கலிஸ் 13 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பிரின்ஸ் கும்பிளே பந்துவீச்சில் அவரிடமே பிடிகொடுத்து 23 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
ஆட்ட நேர இறுதியில் தென்னாபிரிக்கா 4 விக்கெட் இழப்புக்கு 304 ஓட்டங்கள் எடுத்தது. அம்லா 85 ஓட்டங்களுடனும் டி வில்லியர்ஸ் 10 ஓட்டங்களுடனும் களத்திலிருக்கின்றனர்.
இந்திய அணியின் சார்பில் கும்பிளே மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.