-ஏ.எல்.எம்.அமானுல்லா-
கிழக்கு மாகாணத்தில் நடைபெறப்போகும் மாகாணசபைத் தேர்தலானது இம்மாகாணத்தில் பாரம்பரியமாக வாழ்ந்துவரும் தமிழ் பேசும் மக்களின் எதிர்காலத்திற்கு ஒரு சவாலாக அமைந்துள்ளது. தொடர்ந்தும் கிழக்கு மாகாணம் தமிழ் பேசும் மக்களின் அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசமாக இருக்கப்போகின்றதா அல்லது பேரினவாதிகளின் ஆக்கிரமிப்புக்குள்ளாகி அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் செல்லப்போகின்றதா என்ற கேள்வி எழுகிறது.
கிழக்கிலிருந்து புலிகள் அகற்றப்பட்டபின் ஏற்பட்டுள்ள நிலை பற்றி சிந்திக்க வேண்டும். இலங்கையில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரேயொரு மாவட்டமான அம்பாறையில் பொத்துவில், அக்கரைப்பற்று, இறக்காமம், தீகவாபி ஆகிய முஸ்லிம்களின் பாரம்பரிய பிரதேசங்களில் வேகமாக சிங்கள குடியேற்றங்கள் நடைபெறுவதைத் தடுத்து நிறுத்த முடியாது கூப்பாடுபோடும் நமது முஸ்லிம் தலைவர்களைத்தான் காண முடிகின்றது.
தமது பதவிகளுக்காக வாய்மூடி மௌனியாக இருக்கும் நமது மக்கள் பிரதிநிதிகளையும் காண முடிகின்றது. நிலம் பறிபோவதைப்பற்றி வேதனைப்படும் மக்களின் ஆதங்கம் எவருக்கும் விளங்குவதாயில்லை.
மூதூரிலும் திருகோணமலையின் பல பகுதிகளிலும் முஸ்லிம்களது பிரதேசங்களில் வேகமாகப் பரவிவரும் சிங்களக் குடியேற்றங்கள் பற்றி மௌனமாக இருக்கும் அரசியல்வாதிகளின் செயல்கள் கவலை தருகின்றன.
2001 ஆம் ஆண்டு குடிசனக் கணக்கெடுப்பின்படி அம்பாறை மாவட்டத்தில் 39.3 வீதம் சிங்களவர்களும் 18.7 வீதம் தமிழர்களும் 41.6 வீதம் முஸ்லிம்களும் வாழ்வதாகக் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில் இடம்பெறும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை நோக்கும்போது முஸ்லிம்களை விட இரண்டு வீதமே குறைவாக இருந்த சிங்களவரது எண்ணிக்கை முஸ்லிம்களின் எண்ணிக்கையைவிட அதிகரித்திருக்க வாய்ப்பே உள்ளது. இப்படியான நிலையில் தமிழ் பேசும் மக்கள் தொடர்ந்தும் பிளவுபட்டிருந்தால் அதன் தாக்கம் எதிர்காலத்தில் பயங்கரமாயமையும். அம்பாறை மாவட்டத்தை முஸ்லிம்களின் மாவட்டமென்றோ தமிழ் பேசும் மக்களின் மாவட்டமென்றோ கூறமுடியாது.
முஸ்லிம்- தமிழ் உறவில்தான் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் எதிர்காலம் தங்கியுள்ளது. அதேபோல் தான் தமிழர்களது நிலையும். இருசமுதாயங்களும் சிந்திக்க வேண்டிய காலம் இது. சில வருடங்கள் பதவியிலிருந்து கொழும்பில் பங்களா சுகம் அனுபவிக்கும் அரசியல்வாதிகள் அதாவது நமது முஸ்லிம் தலைவர்கள் இதுபற்றிக் கவலைப்படமாட்டார்கள். மக்கள் தான் கவலைப்படுகின்றார்கள்.
மக்கள் தலைவர் மர்ஹும் அஷ்ரப் கட்டி வளர்த்த கட்சியிலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள் இன்று நோக்கமின்றி பதவிகளுக்காக சொந்த சிந்தனையை இழந்து நிற்கின்றார்கள்.
முஸ்லிம் மக்களால் கடந்த பொதுத் தேர்தலில் அம்பாறையிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட நான்கு முஸ்லிம்களும் மூன்று கட்சிகளில் உள்ளனர். திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலிருந்து முஸ்லிம் காங்கிரஸிலிருந்து தெரிவான இரு பிரதிநிதிகளும் கட்சி மாறி அமைச்சர்களாகவுள்ளனர்.
கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொள்ளும் ஏழு முஸ்லிம் பிரதிநிதிகள் அமைச்சர்களாக, பிரதி அமைச்சர்களாக இருக்கின்றபோதும் கிழக்கில் முஸ்லிம்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுத்துநிறுத்த முடியவில்லை.
மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் முஸ்லிம் மக்கள் படும் வேதனையை எவரும் புரிந்துகொள்ளாமலிருக்கின்றார்கள்.
இப்படியான நிலையிலேயே கிழக்கு மாகாண சபைத் தேர்தலை முஸ்லிம் மக்கள் எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றார்கள்? தமிழர்களின் நிலை என்ன? சிந்தித்துச் செயற்பட வேண்டிய கேள்விகளாகும்.
இரு சமூகங்களும் கண்ணியமாக நடந்துகொள்ளாவிட்டால் எதிர்கால சந்ததியின் சாபத்திற்கு ஆளாக வேண்டிவரும். திருத்த முடியாத தவறைச் செய்த கொடியவர்களாகி விடுவோம். சொந்தப் பிரதேசத்தை இழப்பதா, காப்பதா என்பதை முடிவு செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது.
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் கிழக்கின் சிங்கள, பௌத்த உரிமையை நிலைநாட்டுவதாக அமையுமென்று ஹெல உரிமைப் பேச்சாளர் பகிரங்கமாகக் கூறியிருப்பது சிந்திக்கப்பட வேண்டியது.
ஒரு மாகாண சபையில் ஐந்து மாகாண அமைச்சர்கள் மட்டுமே இடம்பெறலாம். முதலமைச்சர் உட்பட வடக்கு மாகாணசபை ஆலோசனை சபையில் இனவீதத்திற்கேற்ப மூவினத்தவரும் நியமிக்கப்படப் போவதாகச் செய்திகள் கூறுகின்றன.
அப்படியிருக்கும் போது கிழக்கில் ஏன் பௌத்த சிங்கள உரிமையை நிலை நாட்டுவது பற்றி பேசுகின்றார்கள். முஸ்லிம்களும் தமிழர்களும் ஒற்றுமைப்படமாட்டார்கள். அவர்களைப் பிரித்து வைத்துக் கொண்டு காரியம் சாதிக்கப் பார்க்கின்றார்கள் பேரினவாதிகள். நிலைமை இப்படியிருக்க நமது முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமிழர்களும் முதலமைச்சர் பதவி பற்றியும் அமைச்சர்கள் எண்ணிக்கை பற்றியும் பேசுகின்றனர்.
ஒருவர் முதலமைச்சர் உட்பட நான்கு முஸ்லிம் அமைச்சர்கள் இருக்க ஒப்புக் கொள்ளும் கட்சிகளுடன் ஒப்பந்தம் செய்வதாகக் கூறியுள்ளார். மீதமுள்ள ஒரு அமைச்சர் சிங்களவரா, தமிழரா என்று அவர் கூறவில்லை.
பேரம்பேசி பதவிகள் பெறும் கீழ்த்தர அரசியல்வாதிகளை நம்பி தமது எதிர்காலத்தைச் சீரழித்துக் கொள்ளக்கூடாது . அது சமுதாயத்திற்குச் செய்யும் படுபாதகமாகும்.
யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளவேண்டும் . முஸ்லிம்களுக்கென தென்கிழக்கு மாகாணசபை என்ற கோஷம் இன்று கைவிடப்பட்டுவிட்டது. குரைத்த நாய்களுக்கு எலும்புத் துண்டைப் போட்டு சத்தத்தை அடக்குவது போல பல நிகழ்வுகள் இடம்பெற்றுவிட்டன. பேரினவாதம் புத்திசாதுரியமாகச் செயற்படுகின்றது.
கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் சிங்களவர்களும் முறையே முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களில் உள்ளனர்.
இவ்வாறு உள்ளதை கடந்த பொதுத்தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தியுள்ளன. கடந்த பொதுத் தேர்தலில் கிழக்கு மாகாணத்திலிருந்து ஏழு தமிழர்களும் ஆறு முஸ்லிம்களும் மூன்று சிங்களவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதன் அடிப்படையில் தான் மக்கள் தேர்தலைப் புறக்கணிக்காது வாக்களித்தால் மாகாண சபைப் பிரதிநிதித்துவமும் அமையும்.
இதன்படி நியாயமாக அரசியல் சாணக்கியத்துடன் செயற்பட வேண்டியது பொறுப்புள்ளவர்களின் கடமை. வீணாக தனக்கு மூச்சுப்போனாலும் எதிரிக்குச் சகுணம் பிழையாகட்டும் என்று முஸ்லிம்களோ, தமிழர்களோ நடந்து கொள்ளக்கூடாது.
கிழக்குத் தேர்தலில் முஸ்லிம், தமிழ் மக்கள் கூட்டணி அமைய வேண்டும்.
முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் தலா ஒரு அமைச்சுகளும் சிங்களவர்களுக்கு ஒரு அமைச்சும் கிடைப்பது தான் நீதியானது.
அவர்களில் கிழக்கு மாகாண சனத்தொகை எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கும் தமிழர் ஒருவர் முதலமைச்சராகவும் மேலுமொருவர் அமைச்சராகவும் இடம்பெறுவது சரியானது. இதைப் பேசி முடிவு செய்ய வேண்டியது தமிழ் பேசும் இரு இனத்தவரேயன்றி வெளியாராக இருக்கக் கூடாது.
பூனைகள் அப்பத்தைப் பங்கிட முடியாது. குரங்கிடம் போய் நடந்த கதையை முஸ்லிம், தமிழ் அரசியல்வாதிகள் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். அன்று சிறுவர்களுக்காகக் கூறப்பட்ட கதை இன்று நமது அரசியல்வாதிகளுக்கு அறிவு புகட்டக் கூடியதாக இருக்கின்றது.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. தமிழர், முஸ்லிம் ஒற்றுமை நீங்கில் இருதரப்புக்கும் அழிவு என்பதை உணர்ந்து உடனடியாகச் செயற்படும் காலம் வந்து விட்டது.
புத்திக்கூர்மையுடன் சிந்திப்போமா, புல்லுருவிகளுக்கு இடம்கொடுப்போமா?