Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, March 28, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
பாமர மக்களின் தத்துவஞானி
[28 - March - 2008] [Font Size - A - A - A]
* இன்று வேதாத்திரி மகரிஷி இறைநிலை எய்திய ஈராண்டு நிகழ்வு

-செல்வத்தம்பி மாணிக்கவாசகர்-

உலக சமுதாய சேவாசங்கத்தின் ஸ்தாபகர் அருட்தந்தை யோகிராஜீ தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் இறைநிலை எய்திய ஈராண்டு நிகழ்வு தினம் இன்றாகும். இவர் திருமூலர், திருவள்ளுவர், தாயுமானவர், இராமலிங்க பெருமான் ஆகியோர் மரபுநெறிநின்று ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்ட சமுதாயப் பணியை ஆற்றி வந்துள்ளார்.

மேலும் அருட்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி சென்னைக்கு அருகில் உள்ள கூடுவாஞ்சேரிகிராமத்தில் 1911 ஆம் ஆண்டு ஓர் எளிய நெசவாளிக் குடும்பத்தில் பிறந்தார். இளமைப் பருவத்திலேயே கடவுள் யார்? வாழ்க்கை என்றால் என்ன? உலகில் ஏன் வறுமை உள்ளது? என்ற கேள்விகளைத் தனக்குள் கேட்கலானார். பல ஆண்டுகள் தொடர்ந்து அவர் மேற்கொண்ட தவம் மற்றும் ஆராய்ச்சியால் தனது 35 ஆவது வயதில் ஞானம் பெற்றார். இத்துடன் சித்தர்களின் தத்துவங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டார்.

இவர் 1958 ஆம் ஆண்டு "உலக சமுதாய சேவாசங்கம்" என்ற அமைப்பை நிறுவினார். இதன் நோக்கம், மனித குலத்திலே அமைதி காண்பதேயாகும். அமைதி என்றால் தனி மனிதனிடத்திலே அமைதி வேண்டும். குடும்பத்திலும் சமுதாயத்திலும் அமைதி வேண்டும். அதன் பயனாக மலரும் உலக அமைதியும் வேண்டும். ஓர் ஊரிலே அமைதி ஏற்பட்டு விட்டது, அல்லது ஒருநாடு அமைதியாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த நாட்டுக்கு அண்டை நாட்டினுடைய ஆபத்து இருக்கிறவரையில் அந்த அமைதி நிலைக்காது. அதேபோல், தனிமனிதர்கள் பலர் சேர்ந்துதான் சமுதாயம். அந்த சமுதாயம் முழுமையிலும் அமைதி இல்லாவிட்டாலும் தனி மனிதன் அமைதியாக வாழ முடியாது. ஆகவே, இச்சங்கத்தின் முக்கிய நோக்கம், தனிமனித அமைதி, குடும்ப அமைதி, உலக அமைதி ஆகியவே.

ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு வகையில் அல்லது பல வகைகளில் தொல்லைகளையும் துன்பத்தையும் அனுபவிக்கின்றான். ஏன் இந்த நிலைமை என்று மக்களைச் சிந்திக்க வைக்க வேண்டும். மக்கள் அறிஞர்களது வாழ்க்கை நெறிகளைத் தெரிந்து கொள்ளாமலும், தெரிந்தாலும் மதிப்பளித்து வாழ்க்கையில் கடைப்பிடிக்காமலும் புறக்கணித்தனர். இத்தகைய புறக்கணிப்பின் அளவிற்கு ஏற்ப வறுமை, நோய், பகை, பிணக்கு, போர் ஆகியவைகளும், ஐந்து பெரும் பழிச் செயல்களும் உலகில் மலிந்து விட்டன. உலகப் பேரறிஞர்களின் கருத்துகளை நினைவில் கொள்ள வேண்டும். திட்டமிட்ட செயல் திருத்தங்கள் மூலம் மனித குலம் அமைதியைப் பெற்று இன்புற்று வாழ ஏற்ற தொண்டினை இயன்றளவு செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் கொண்ட ஒரு உலகப் பொது நிறுவனமே உலக சமுதாய சேவா சங்கம். மேலும் நாடு, மொழி, இனம், மதம் என்பன போன்ற வேறுபாடுகளைக் கடந்து மனித சமுதாயம் என்று பொது உணர்வில் கடமையில் சிறந்த தொண்டை இச்சங்கம் செய்து வருவதை யாவரும் கண்கூடாகக் காணக்கூடியதாக உள்ளது.

உலக சமுதாய சேவா சங்கம் மனித இன வாழ்வில் நிலையான அமைதியைக் காண மூன்று செயல்திட்டங்களை வகுத்துள்ளது. அவை, தனிமனித அமைதி. அதாவது தனிமனிதன் மனவளக் கலைப் பயிற்சியின் மூலம் அறிவிலே தெளிவு பெற்று வாழ்வில் அமைதியாக வாழ ஏற்ற பயிற்சித் திட்டம். அதாவது எளிய முறை உடற்பயிற்சி, எளியமுறை காயகல்பப் பயிற்சி, தவம், தற்சோதனை (அகத்தாய்வு) தத்துவ விளக்கங்கள் ஆகியவை.

சமுதாய அமைதி என்பது தன்னைத் தவிர்த்து உள்ள குடும்பம், நட்பு, ஊர் மற்றும் தொடர்பு கொண்டு செயலாற்றும் பிறர் அனைவரோடும் அன்புடனும், பண்புடனும், தொண்டுள்ளத் தோடும் தொடர்பு கொண்டு அறநெறி நின்று அமைதியாக வாழத்தக்க பயற்சித் திட்டம்.

உலக அமைதி என்பது, உலக நாடுகளுக்கிடையே போர் அச்சம் நீங்கி நிலையான அமைதியைக் காணவும் அவ்வமைதியைப் பாதுகாக்கவும் ஓருலக ஆட்சித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி சுயமுயற்சியின் மூலமே வாழ்க்கையில் முன்னேறியவர். இவர் எளிய முறைக் குண்டலினியோகம், அவயங்களை வருத்தாத உடற்பயிற்சி, தளராத தற்சோதனை, சித்தர் நெறியான காயகல்ப யோகம். இவை நான்கும் ஒருங்கிணைந்த வாழ்க்கை முறையையே போதித்து மனித குலம் உய்ய அருள் தொண்டாற்றினார்.

இவர் நிறுவிய `உலக சமுதாய சேவாசங்கம்' இன்று இந்தியா, மலேசியா, ஜப்பான், தென்கொரியா, மெக்ஸிகோ, அமெரிக்கா, இலங்கை போன்ற நாடுகளில் பல கிளைகளைக் கொண்டு இயங்கி வருகின்றது.

தத்துவத்திலே அத்வைதத்தையும் யோகத்திலே ராஜயோகத்தையும் பாமர மக்களும் உணர்ந்து கொள்ளும் வகையிலே அவர் கற்பிக்கின்ற உளப்பயிற்சி அமைந்திருப்பதன் காரணத்தினால் "பாமர மக்களின் தத்துவ ஞானி" (Common Mans Philosopher) எனப்போற்றப்படுகிறார். மேலும் மகரிஷி வெளியிட்டுள்ள எந்த ஒரு கருத்தும் பகுத்தறிவிற்கோ, விஞ்ஞானத்திற்கோ புறம்பானதன்று என்பது குறிப்பிடத்தக்கது.

வேதாத்திரி மகரிஷி 2000 க்கும் மேற்பட்ட ஆன்மீகம் மற்றும் தத்துவப்பாடல்களை இயற்றியுள்ளார். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இவர் எழுதியுள்ள 75 க்கு மேற்பட்ட நூல்கள் வேதாத்திரி பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் `அன்பொளி' என்ற மாத இதழும் வெளியிடப்பட்டு வருகிறது.

1984 ஆம் ஆண்டு பொள்ளாச்சி ஆழியாவில் வேதாத்திரி மகரிஷி குண்டலினி யோகா மற்றும் காயகல்ப ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவப்பட்டது. இதன் சார்பில் `ஓம்' எனும் வடிவில் அறிவுத் திருக்கோயில் நிறுவப்பட்டுள்ளது.

மேலும், உடல் நலம், மனவளம், உயிர்வளம் காக்க தத்துவஞானி வேதாத்திரி மகரிஷியின் அற்புத மனவளக்கலைப் பயிற்சிகளை தமிழ்நாடு, இந்தியாவைச் சேர்ந்த மனவளக்கலைப் பேராசிரியர் ஆர்.எம்.ஜே.இராமநாதன் கொட்டாஞ்சேனை, விவேகானந்தா மேட்டில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில் மனவளக் கலை ஆரம்பநிலைப் பயிற்சிகளை மாலை 6 மணியிலிருந்து 8.30 மணிவரையும் அகத்தாய்வு (2 நாள் பயிற்சி)யை 29 ஆம் திகதியும், 30 ஆம் திகதியும் காலை 8 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை நடத்துவார். இத்துடன், வெள்ளவத்தை, மோர்வீதியில் அமைந்துள்ள இலங்கை மனவளக்கலை மன்றத்தில் தியானமும் அன்றைய தினம் (28.03.2008) நடைபெறும். ஆகையினாலே அனைத்து மனவளக்கலை மன்ற உறுப்பினர்களையும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.

Email this page Your Opinion Print this page
தமது அரசியல் வாழ்வில் ஈழத்தமிழர் இறைமையை மீள்வித்துத் தந்த தந்தை செல்வா
பாமர மக்களின் தத்துவஞானி
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ், முஸ்லிம் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com