-சா.ஆ. தருமரத்தினம்-
இத்தீவின் முதலாவது பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் 1947 ஆம் ஆண்டில் நடைபெற்ற போது காங்கேசன்துறைத் தேர்தல் தொகுதிக்குப் போட்டியிட அவரை அதன் வேட்பாளராக நிறுத்தியிருந்த அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் அத் தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் வைத்து தொகுதி வாக்காளப் பெருமக்களுக்குத் தாம் அவர்கள் முன் நிறுத்தியுள்ள வேட்பாளர் சா.ஜே.வே. செல்வநாயகத்தின் குணநலன் குறித்து பின்வருமாறு சான்று பகர்ந்திருந்தார்.
"உங்கள் வேட்பாளர் சா.ஜே.வே. செல்வநாயகம் இத்தீவின் ஒரு பிரபல சிவில் வழக்குரைஞர். அரசு அவருக்கு உயர்நீதிமன்ற நீதியரசர் பதவியையே வழங்க முன்வந்திருந்த பொழுதிலும் அதனை நிராகரித்துவிட்டு தமிழ் மக்களின் நலன்களை முன்னேற்றுவதற்குப் பாடுபட்டு உழைப்பதற்காகவே அரசியல் பொது வாழ்விற்குத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். தான் ஒரு கிறிமினல் வழக்குரைஞர் என்பதை நீங்கள் அறிவீர்கள். கிறிமினல் அப்புக்காத்தாகிய பொன்னம்பலம் கூடத் தவறு செய்யலாம். ஆனால், சிவில் அப்புக்காத்தாகிய செல்வநாயகமோ தாமும் தவறு செய்யமாட்டார், கிறிமினல் அப்புக்காத்தாகிய பொன்னம்பலம் தவறு செய்வதை அனுமதிக்கவும் மாட்டார். ஆகவே, கிறிமினல் அப்புக்கத்தானை பொன்னம்பலமாகிய நானும் தவறு செய்யாது காப்பதற்கு நீங்கள் செல்வநாயகத்தையே உங்கள் பாராளுமன்ற உறுப்பினராக எதிர்வரும் தேர்தலில் தெரிவுசெய்தல் வேண்டும் என வாக்காளரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். காங்கேசன்துறை மக்களும் அவ்வாறே சா.ஜே.வே. செல்வநாயகத்தையே தமது பிரதிநிதியாகத் தெரிவுசெய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பியிருந்தார்கள்.
அமரர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் நமக்கு ஈந்திருந்த குணநலச் சான்றுக்கு அமைவாகவே தந்தை செல்வா தமது அரசியல் பொதுவாழ்வை நடத்தியிருந்தார் என்பதற்கு அவரது வாழ்க்கை வரலாறே சான்றுரைக்கும்.
இத்தீவு 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் நாள் சுதந்திரம் அடைந்தபோது நாட்டின் தேசியத் தமிழ் நாளேடான "வீரகேசரி" பத்திரிகை அதன் சிறப்பு மலராக வெளியிட்டிருந்த "முதல் சுதந்திர தின மலரில்" தந்தை செல்வா அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினராகத் தாம் தீட்டியிருந்த நீண்ட கட்டுரை தீவின் அறுபதாம் ஆண்டு நினைவாக இவ்வாண்டும் அந்நாளேட்டினால் மறுவெளியீடு செய்யப்பட்டிருந்தது தெரிந்ததே. தமது நீண்ட கட்டுரையை தந்தை செல்வா பின்வருமாறு ஆரம்பித்திருந்தார். இத்தீவின் சிங்கள மக்கள் இன்று தமது சுதந்திர நாளைக் கொண்டாடுகிறார்கள். அதற்காக அவர்களைப் பாராட்டுதல் வேண்டும். அவ்வாறு அவர்களைப் பாராட்டும் அதேவேளையில் தமது சுதந்திரத்துக்காகவே பாடுபட்டு உழைப்பதற்குத் தமிழ் மக்கள் தாமும் இது முதல் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளுதல் வேண்டும்." தமிழ் ஈழ நாட்டிற்கு அவர் எத்தகைய சுதந்திரத்தை வாஞ்சித்திருந்தார் என்பதை அக்கட்டுரையின் உள்ளடக்கமே விளம்புகின்றது. தமிழ் மக்கள் ஒரு சொந்த அரசை உடையவர்களாக இருந்தார்கள் என்றும் பொருளாதார வளம்மிக்கதாக அந்த அரசு இருந்துள்ளது என்பதை வலியுறுத்துவதற்காக சிங்கள அரசுகளுடன் போர் புரியும் அளவிற்குக் கூட அது வளம்பெற்று இருந்ததென்றும், இன்றும்கூட தென் இலங்கையில் ஒரு ரூபாவுக்குக் கொள்வனவு செய்யக்கூடியவற்றிலும் அதிக அளவு பொருட்களை வடகிழக்கில் வாங்க முடியும் எனவும் எடுத்துரைத்து இருந்தார்.
இத்தீவு சுதந்திரம் பெற்று முழுதாக ஓர் ஆண்டு கடப்பதற்குள் இத்தீவின் தமிழ் மக்கள் தொகையில் சரியாக அரைவாசித் தொகையினரின் குடியுரிமை வாக்குரிமைகளைப் பறிப்பதற்காக அரசு இந்திய பாகிஸ்தானிய பிரஜாவுரிமைச் சட்டத்தை 1948 மார்கழித் திங்களில் கொண்டுவந்தபோது அதனைப் பாராளுமன்றத்தில் கடுமையாக எதிர்த்து வாதிடும்போது, "இன்று இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு விழுகிறது அடி, நாளை கண்டிப்பாக இலங்கைத் தமிழர்களுக்கும் அது விளப்போகிறது. உத்தியோக மொழிச் சட்டம் கொண்டு வரப்படும் போதே. இது உணரப்படும்" என்றார்.
அவ்வாறு அவரைச் சொல்ல வைத்தது யாது? தாம் சார்ந்த அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியில் தாமும் கட்சியின் தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் ஆகிய இருவர் மட்டுமே மேற்படி விவாதத்தின் போது மேற்படி சட்டத்திற்கு எதிராக வாக்களிப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருந்த போதும் அக்கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஐவரும் சம்பந்தப்பட்ட விவாதத்தின் போதும் அதன் மீதான வாக்கெடுப்பின் போதும் சபையில் பிரசன்னமாக இருக்கக்கூடாது எனப் பணிக்கப்பட்டிருந்தமையாலேயே! மேலும் அன்று அதற்கு மாறாகச் சபையில் பிரசன்னமாகவிருந்த கோப்பாய் பாராளுமன்ற உறுப்பினர் கு. வன்னியசிங்கம் அவர்களை அணுகிய கட்சியின் தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலம், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியில் இருவர் மட்டுமே மேற்படி மசோதாவுக்கு எதிராக வாக்களிப்போம் எனத் தாம் கிழவர் சேனநாயக்காவுக்கு அளித்திருந்த வாக்குறுதியை் அது மீறுவதாக இருக்கும் என்றும் ஒன்றில் வன்னியசிங்கம் சபையில் இருந்து வெளியேறாவிடில் தாம் வெளியேறப் போவதாக வற்புறுத்தவே வன்னியசிங்கத்தையும் சபையில் பிரசன்னமாக இருக்கவிடாது விரட்டியிருந்தமையாலேயே இன்று இந்திய வம்சாவளியினருக்கு விழும் அடி நாளை இலங்கைத் தமிழர்களுக்கும் விழும். உத்தியோகமொழிச் சட்டம் கொண்டுவரப்படும் பொழுது அது உணர்ந்து கொள்ளப்படும் என்றும் தந்தை செல்வாவைச் சொல்ல வைத்திருந்தது.
இவ்விதம் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக பாராளுமன்ற சனப் பிரதிநிதிகள் சபையில் தமது சகாவாகவிருந்த வன்னியசிங்கம் மற்றும் மேலவை (செனெட்) உறுப்பினராக இருந்த இரும்பு மனிதர் டாக்டர் ஈ.எம்.வி. நாகநாதனோடும் இணைந்து தந்தை செல்வா இலங்கைத் தமிழரசுக் கட்சியை நிறுவினார்.
இத்தீவில் அரசு கையாண்டுவந்த அரச செலவிலான சிங்களக் குடியேற்றத் திட்டங்கள் மூலம் தமிழ் இஸ்லாமிய மக்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட பூமி பறிக்கப்படவும், சிலாபம், நீர்கொழும்புத் தமிழர்கள் அவர்கள் மீது சிங்களத்தைப் போதனா மொழியாகத் திணித்ததன் மூலம் ஓர் இரு தலைமுறைகளில் சிங்களவர்களாக மாறிய நிலை வடகிழக்கிலும் ஏற்பட்டுவிட அனுமதியாது இருப்பதற்காக ஓர் தமிழ் அரசை நிறுவுவதே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் குறிக்கோளாக இருந்தது. ஆயினும், நடைமுறையில் இருந்த சோல்பரி ஒற்றையாட்சித் திட்டத்தின் கீழ் தனியரசு நிறுவுவதற்கான போராட்டம் நாட்டுப் பிரிவினையாகக் கருதப்பட்டு, அதற்கான இயக்கம் தடைசெய்யப்படவும், முளையிலேயே தழைக்கவிடாது இயக்கம் கிள்ளியெறியப்படாது காக்கும் ஒரே நோக்கமாகவே கட்சி அது விரும்பிய தமிழரசை சமஷ்டிக் கூட்டாட்சியின் ஓர் அங்கமாகவே பெற விரும்புவதாகவும் பிரகடனப்படுத்தியிருந்தது. அதனால், காரணப் பெயராக அது சமஷ்டிக் கட்சியெனவும் அறியப்பட்டது. பழைய பாராளுமன்ற நடைமுறைப் பதிவேடுகளைப் புரட்டிப் பார்ப்பவர்கள் கட்சி உறுப்பினர்களது பெயர்களுக்குப் பின்னால் அடைப்புக் குறிகளுக்குள் (F.P) எனக் குறிப்பிடப்படாது. (I.T.A.K.) எனக் குறிப்பிடப்பட்டிருக்கக் காணலாம். மாறாக கட்சி தமிழில் ஒரு பெயரையும் ஆங்கிலத்தில் பிறிதொரு பெயரையும் கொண்டதாக இருந்திருக்கவில்லை. இன்றும் கூட தமிழர் கூட்டமைப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சி எனும் பெயரிலேயே இயங்கிவருதல் தெரிந்ததே!
இந்திய வம்சாவளித் தமிழர்கள் வாக்குரிமையுடையவர்களாக இருந்திருப்பின் 1956 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட சிங்களம் மட்டும் உத்தியோக மொழிச் சட்டம் வந்திருக்கவே மாட்டாது. காரணம், பாராளுமன்றத்தில் இருந்திருக்கக்கூடிய அவர்களுடைய பிரதிநிதிகளுக்கும் மேலாக அவர்களது வாக்குப் பலத்தால் வெற்றிபெற்ற மார்க்சிய இடதுசாரி உறுப்பினர் எண்ணிக்கையும் இருந்திருக்கும் என்பதால் இன்று இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு விழும் முதலடி நாளை இலங்கைத் தமிழர்களுக்கும் விழும். உத்தியோக மொழிச்சட்டம் வரும்போதே அது உணரப்படும் என அப்போதே தந்தை செல்வா உரைத்திருந்தார். ஆயினும், அதனை எதிர்கொள்வதற்குப் பாராளுமன்றத்தில் அன்று (1956) இல் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியில் அதன் தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் ஒருவர் மட்டுமே எஞ்சியிருந்தார். ஏனையோர் அனைவரும் தேர்தலில் தோல்வியடைந்திருந்தனர்.
சிங்களம் மட்டும் சட்டத்தை பாராளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் தந்தை செல்வா கடுமையாக எதிர்த்திருந்தார். அவரது தலைமையில் பாராளுமன்றத்துக்கு முன்பாக காலிமுகத்திடலில் தமிழரசுக் கட்சியினர் நடாத்திய சத்தியாக்கிரகப் போராட்டம் காவல் துறையினர் பார்வையாளர்களாகப் பார்த்திருக்க அவர்கள் முகதாவில் சிங்களக் குண்டர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியது. தலைவர்களும், தொண்டர்களும் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர். சிங்களம் மட்டும் சட்டத்தை ஆட்சேபிக்கும் சாத்வீக தொடர் போராட்டத்துக்கு வியூகம் வகுப்பதற்காக 1956 ஆகஸ்ட் திங்களில் தமிழரசுக் கட்சியால் கூட்டப்பட்ட கட்சியின் சிறப்பு மாநாடு திருகோணமலையில் கூடிற்று. மாநாட்டில் கலந்துகொள்ளும் பொருட்டு யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, பொத்துவில், மட்டக்களப்பு போன்ற தொலைதூரத்தைத் தலைவர்களும், தொண்டர்களும் கால்நடையாகவே கடந்து வந்திருந்தனர்.
தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் ஓர் அரசியல் தீர்வை அரசு கண்டுகொள்வதற்கு மாநாடு ஒரு வருட காலக்கெடு விதித்துத் தீர்மானம் நிறைவேற்றியிருந்ததுடன் விதிக்கப்பட்ட ஓராண்டு காலக்கெடு முடியுமுன்பாக தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாவிடில் சாத்வீக சட்டமறுப்புப் போராட்டத்தைக் கட்சி ஆரம்பிக்குமென மாநாடு அறைகூவல் விடுத்திருந்தது. மேற்படி தீர்மானத்தை அரசு கண்டுகொள்ளாது அசட்டை செய்தபோது, சிறப்பு மாநாடு தெரிவு செய்திருந்த கட்சியின் புதிய தலைவர் கு. வன்னியசிங்கமோ தமது சட்டத்தொழிலையே துறந்து சாத்வீக சட்டமறுப்புப் போராட்டங்களில் கலந்துகொள்வதற்கான தொண்டர்களைத் தெரிவு செய்து, அவர்களுக்குப் பயிற்சியளிக்கத் தலைப்பட்டார். தீவு அடங்கலும் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தீவு முழுமையும் ஏற்பட்டிருந்த கொந்தளிப்பைத் தணிக்கும் பொருட்டு மக்கள் ஐக்கிய முன்னணி அரசின் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா தமிழரசுக் கட்சியைப் பேச்சுவார்த்தை நடத்த வரும்படி அழைப்பு விடுத்திருந்தார்.
பேச்சுவார்த்தைகளின் தொடக்கத்தின் போதே பிரதமர் பண்டாரநாயக்கா சிங்களம் மட்டும் உத்தியோக மொழிச் சட்டத்தில் ஒரு மாற்றமும் செய்யப்போவதில்லையென்றும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுவின் தலைவர் செல்வநாயகம் சிங்களமொழியுடன் தமிழ்மொழிக்கு சமமான உத்தியோகமொழி அந்தஸ்தை வலியுறுத்தும் உரிமையைக் கைவிடப்போவதில்லையென்றும் தத்தமது நிலைப்பாட்டைப் பரஸ்பரம் தெரிவித்துக் கொண்டிருந்தனர். மேலும், தமிழரசுக் கட்சிப் பிரதிநிதிகளை விழித்து இத்தீவின் தேசிய இனப்பிரச்சினைக்குரிய அரசியல் தீர்வாக கூட்டாட்சி முறையிலான சமஷ்டி ஆட்சியை வலியுறுத்திவரும் உங்களிடம் இத்தீவிற்கான சமஷ்டி அரசியல் தீர்வு எதுவும் ஆவணமாக உண்டாவென்று விசாரித்த பிரதமர் பண்டாரநாயக்கா இருந்தால் தமது சொந்தப் படிப்பிற்கு அதன் ஒரு பிரதியை அவர்களால் தமக்கு உதவும்படி கேட்டிருந்தார். ஏனையோரை முந்திக்கொண்டு ஆமென்று பதிலளித்த இரும்பு மனிதர் நாகநாதன் அடுத்த சந்திப்பின் போது அதன் ஒரு பிரதி பிரதமரிடம் ஒப்படைக்கப்படுமென உறுதியளித்திருந்தார். உண்மையாகவே அப்போது இத்தீவுக்கான சமஷ்டி அரசியல் திட்டம் ஒன்றும் இருந்திருக்கவில்லை. ஆகவே, ஒரே இரவில் ஒரு மருத்துவரான டாக்டர் நாகநாதனால் தயாரிக்கப்பட்ட இத்தீவுக்கான சமஷ்டித் திட்டத்தின் வரைவு சட்ட வல்லுநர்களான கட்சியின் ஏனைய தலைவர்களது அங்கீகாரம் பெறப்பட்டு, அடுத்த சந்திப்பின் போது பிரதமரிடம் கையளிக்கப்பட்டிருந்தது. நல்லெண்ணத்துடன் பிரதமரால் கேட்டுப் பெறப்பட்டிருந்த மேற்படி ஆவணம் பின்பு நாட்டைப் பிரிப்பதற்கான தமிழரசுக் கட்சியின் சதிக்கு ஆதாரமாக 1965-68 காலப் பகுதியில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரால் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்ததும் தெரிந்ததே!
(நாளை தொடரும்)