அநுராதபுரம் வைத்தியசாலை களஞ்சிய அறையில் ஒரு வருடத்துக்கும் மேலாக களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி ரூபா பெறுமதிவாய்ந்த மருந்துப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை நீண்டகாலமாக பாவனைக்கு எடுக்கப்படாததால் பெரும்பாலான மருந்துப் பொருட்கள் பழுதடைந்திருப்பது தெரியவந்துள்ளது. சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி. சில்வா அநுராதபுர வைத்தியசாலைக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு ஆஸ்பத்திரி செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடலொன்றை நடத்திய வேளையிலேயே நீண்டகாலமாகப் பயன்படுத்தப்படாமல் இருந்த பெருந்தொகையான மருந்துகள் களஞ்சியப்படுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மருந்து வகைகள் பாவிக்கப்படாமல் களஞ்சியப்படுத்தப்பட்டமைக்கான காரணத்தை அறிய அதிகாரிகளிடம் அமைச்சர் விசாரணை நடத்தியபோது, முன்பிருந்த வைத்திய அதிகாரியால் இந்த மருந்து வகைகள் வரவழைக்கப்பட்டதாகவும் அவர் வேறொரு வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற பின்னர் அங்கு சேவைக்கு வந்த புதிய வைத்திய அதிகாரி இந்த மருந்துகளை நோயாளர்களின் பாவனைக்கு எடுப்பதை நிராகரித்ததன் காரணமாகவே மருந்துகளை களஞ்சிய அறையிலேயே வைக்கவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னதான் காரணம் கூறப்பட்டாலும் அரசாங்கம் சுகாதார அமைச்சுக்கு வரவு, செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கிக் கொடுத்த நிதியிலிருந்தே இந்த ஒரு கோடி ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது. இன்று பொதுமக்களின் பணம் ஒரு கோடி ரூபா வீணே குப்பையில் கொட்டப்படும் நிலைக்கு வந்துவிட்டது. இந்த பொறுப்பற்ற செயற்பாடுகளுக்கு காரணமானவர்களை கண்டுகொள்ளாமல் இருப்பதா? அல்லது சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வியை பொதுமக்கள் கேட்கின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் அநுராதபுர வைத்தியசாலையில் மட்டும் நடக்கவில்லை. நாட்டில் பரவலாக அரச நிறுவனங்கள், அலுவலகங்களில் அன்றாடம் நடந்துகொண்டே இருக்கின்றன. வீண் விரயமும் ஊழல்களும் அரச அலுவலகங்களில் மலிந்து போயுள்ளன. தட்டிக்கேட்க ஆளில்லை என்ற நினைப்பில் அதிகாரிகள் தான்தோன்றித்தனமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
வடக்கு, கிழக்கில் நோய் வாய்ப்படும் அப்பாவி மக்களுக்கு அங்குள்ள வைத்தியசாலைகளில் மருந்துகள் கிடைப்பதில்லை. குறிப்பாக, யாழ்.குடாநாட்டில் வாழும் மக்களுக்கு போதிய மருந்து வசதிகள் இல்லாத நிலை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. பல சந்தர்ப்பங்களில் உரிய மருந்து வகை கிடைக்காமை காரணமாக அந்த மக்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதை எவராலும் மறுக்க முடியாது. தெற்கில் தேவைக்கு அதிகமாக மருந்துகளை வழங்கும் அரசு மருந்துத் தட்டுப்பாடுள்ள வடக்கு, கிழக்குக்கு மருந்து வகைகளை அனுப்புவதற்கு ஏன் தயக்கம் காட்ட வேண்டும்? வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பின்தங்கிய பல பகுதிகளிலிருக்கும் வைத்தியசாலைகளில் 240 வகையான மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டி இருக்கின்றது. இப்படிப்பார்க்கும் போது ஏழை நோயாளர்களின் உயிர்களுடன் விளையாடிக் கொண்டிருப்பதாகவே இதனை நோக்க வேண்டியுள்ளது. அரசாங்கம் வருடந்தோறும் வரவு- செலவுத் திட்டத்தின் மூலம் சுகாதார சேவைக்காக கோடிக்கணக்கான நிதியை ஒதுக்குகின்றது. அந்த நிதி சீராகப் பயன்படுத்தப்படுவதை அரசு உறுதிசெய்யத் தவறி வருவதை இங்கு சுட்டிக்காட்டியே ஆக வேண்டியுள்ளது. தேவைகளைக் கண்டறிந்து உரிய இடங்களுக்கு உரிய மருந்துவகைகளை அனுப்புவதற்கும் தட்டுப்பாட்டை நிவர்த்திப்பதற்கும் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திக் கூறவிரும்புகிறோம்.
வைத்தியசாலைகளில் மருந்து வகைகள் மட்டுமல்ல ஏனைய மருத்துவ உபகரணங்களுக்கும் பெரும் தட்டுப்பாடு காணப்படுகின்றது. முக்கியமாக கிராமப் புற வைத்தியசாலைகளிலும் தோட்டப்புற வைத்தியசாலைகளிலும் மருத்துவ உபகரணங்கள் காணப்படாமை காரணமாக பெரும் எண்ணிக்கையிலான நோயாளர்கள் நகர்ப்புற வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்படுகின்றனர். நகர்ப்புற வைத்தியசாலைகளில் இட நெருக்கடி காரணமாக நோயாளர்கள் உரிய முறையில் கவனிக்கப்படுவதிலும் பெரும் பிரச்சினைகள் எழுந்துள்ளன. சுகாதார அமைச்சு நகர்ப்புறங்களுக்கு வழங்கும் வளங்களைப் போன்று கிராமப் புற மருத்துவமனைகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுத்தால் பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமல்லவா? ஆரோக்கியமுள்ள மக்கள் சமுதாயத்தை உருவாக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடப்பாடாகும். இக்கடப்பாட்டை உணர்ந்து எதிர் காலத்திலாவது சாத்திரமான நடவடிக்கைகளை அரசு எடுக்குமா?