ஈராக் போரில் பலியான அமெரிக்க படை வீரர்களின் எண்ணிக்கை 4 ஆயிரமாக அதிகரித்துள்ளமை தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் தனது கவலையை வெளியிட்டுள்ளார்.
வரலாற்று ரீதியில் இந் நிகழ்வு எதிர்காலத்தில் நினைவுகூரப்படும்போது எதிர்கால சந்ததியினரின் அமைதிக்காக தமது உயிர்களை அர்ப்பணித்த வீரர்களுக்காக மக்கள் இறைவனுக்கு நன்றி சொல்வார்களென புஷ் தனதுரையில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வீதியோரக் குண்டுத் தாக்குதலில் 4 அமெரிக்க படையினர் பலியானதைத் தொடர்ந்து ஈராக்கில் பலியான அமெரிக்க படையினரின் எண்ணிக்கை புதியதொரு மைல்கல்லை எட்டியுள்ளது.
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக தெரிவு செய்யப்படுவதற்கு தீவிரமாக போராடும் செனட்டர்களான ஹிலாரி கிளின்டனும் பராக் ஒபாமாவும் அமெரிக்க படைவீரர்களின் அர்ப்பணிப்பை பாராட்டியுள்ள அதேவேளை, தாங்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் அவர்களை அமெரிக்காவுக்கு திருப்பியழைப்பதாகவும் உறுதியளித்துள்ளனர்.
இதேவேளை, பலியான வீரர்களின் குடும்பங்களுக்கு அரச திணைக்களத்தினூடாக விடுக்கப்பட்ட அனுதாபச் செய்தியில்;
ஈராக் மீதான போரின் ஆரம்பத்திலிருந்து இதுவரை அங்கு பலியான வீரர்களின் குடும்ப ஆறுதலுக்காகவும் பலத்திற்காகவும் எமது மக்கள் பிரார்த்திப்பார்ளென்பதை அவர்களின் குடும்பங்கள் அறிந்திருக்குமென நாம் நம்புகின்றோம் என புஷ் தெரிவித்துள்ளார்.
பென்டகன் பேச்சாளர் பிரையன் விற்மன் தெரிவித்துள்ள அனுதாபச் செய்தியில்;
ஈராக்கில் பலியான ஒவ்வொரு வீரரும் எம் திணைக்களத்தாலும் தளபதிகளினாலும் குடும்பங்களினாலும் நண்பர்களாலும் எப்போதும் நினைவு கூரப்படுவர் எனத் தெரிவித்துள்ளனர்.
இப் போரில் பலியான ஈராக்கியரின் எண்ணிக்கை இதுவரை சரியாக வெளியிடப்படாத போதும் 89,300 பேர் உயிரிழந்திருப்பதாக தன்னார்வ அமைப்பொன்று தெரிவித்துள்ளது.
ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்து ஐந்தாண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடிய புஷ், அமெரிக்க வெற்றியை நோக்கி பயணிப்பதாக சூளுரைத்திருந்த நிலையிலேயே இவ் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது.இதேவேளை, ஈராக்கிலுள்ள அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பில் புஷ் தனது ஆலோசகர்களுடன் கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.