நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த `மைலாய் படுகொலை'சம்பவத்தின் கொடூரத்தை வியட்நாம் மக்கள் இப்போதும் நினைவு கூருகின்றனர்.
வியட்நாம் மீது அமெரிக்கா போர் தொடுத்த காலம். வியட்நாமின் மத்திய பகுதியில் உள்ள மைலாய் பகுதி மீது, 1968 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் திகதி ஏராளமான அமெரிக்க ஹெலிகொப்டர்கள் வட்டமிட்டன.
அவற்றில், நூற்றுக்கணக்கான போர் வீரர்கள் இருந்தனர். ஹெலிகொப்டர்கள் தரை இறங்கியதும், அதில் இருந்து புறப்பட்ட இராணுவ வீரர்கள், மைலாய், துசாங், கோலூயி ஆகிய இடங்களில் பதுங்கி இருந்த கம்யூனிஸ்ட் கொரில்லா வீரர்களை தேட துவங்கினர்.
கண்ணில் பட்டவர்களையெல்லாம், அவர்கள் சுட்டுக்கொண்டே சென்றதால் எங்கும் மரண ஓலமே கேட்டது. பெண்கள், குழந்தைகள் உட்பட, 500 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொடூர சம்பவம் `மைலாய் படுகொலை' என அழைக்கப்படுகிறது.
இந்த தாக்குதலில், உயிர் பிழைத்தவர்கள் வெகு சிலர் மட்டுமே, பிணங்களின் கீழே பதுங்கி, அவர்கள் தப்பித்தனர். அவர்களில் ஒருவர் டுட்டூ, தற்பொது அவருக்கு 85 வயதாகிறது. நாற்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த கொடூர சம்பவத்தின் சுவடுகள் அவரது நினைவை விட்டு இன்னும் அகலவில்லை.
அவர்கூறுகையில், `காலை நேரத்தில்' கிராமத்தின் மேலே அமெரிக்க ஹெலிகொப்டர்கள் வட்டமிடுவதை பார்த்தேன். குடும்பத்தினரை அழைத்து கொண்டு தப்பி ஓடினேன். கிராமத்தை ஒட்டு மொத்தமாக, அமெரிக்கர்கள் சூறையாடி விட்டனர். பிணங்களை மட்டுமே விட்டு சென்றனர். சிலர் சுடப்பட்டு இறந்தனர். சிலரை உயிரோடு எரித்தனர். கர்ப்பிணி பெண்கள் கூட, தப்பமுடியவில்லை' என சோகத்துடன் விவரித்தார்.
பாம் தத் என்பவருக்கு 80 வயதாகிறது. இவரும், `மைலாய் படுகொலை'யில் இருந்து தப்பித்தவர் தான். அவர் தெரிவிக்கையில், `ஒவ்வொரு முறையும், கிராமங்களுக்கு அமெரிக்க இராணுவ வீரர்கள் வருவர் தேடுதல் வேட்டை நடத்திவிட்டு சென்று விடுவர். அது போல தான், அன்றைய தினமும் இருக்கும் என நம்பினேன். ஆனால், அவர்கள் அனைவரையும் கொல்ல தொடங்கினர். முதலில், விலங்குகளை அழித்தனர். பின்னர், மனிதர்களை அழிக்க தொடங்கினர்' என்றார். `மைலாய் படுகொலை'யை தடுக்க, அமெரிக்கர்களும் முயன்றனர். ஹக் தாம்சன் என்ற பைலட், மைலாய் பகுதியில் அப்பாவி மக்கள் மற்றும் அமெரிக்க இராணுவ வீரர்கள் இடையே ஹெலிகொப்டரை இறக்கி, மக்களை காப்பாற்ற முயன்றார். இந்த முயற்சியில் சிலர் உயிர் பிழைத்தனர்.