* தெரணியகலை ஐ.தே.க.அமைப்பாளர்
இனப்பிரச்சினைக்கு யுத்தத்தின் மூலம் தீர்வு காணமுடியாது. பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணலாம் என்று கூறிக்கொண்டு இந்த அரசு வடக்கில் யுத்தத்தை முன்னெடுத்துச் செல்கின்றது.
தெரணியகலைத் தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் பிரியந்த அபேசிங்க கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போது இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர்;
"இந்த யுத்தம் நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்கின்றது. யுத்தத்தின் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியாது என்பதை உணர்ந்துதான் எமது தலைவர் ரணில் விக்கிரமசிங்க 2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைச் செய்திருந்தார்.
இதன் மூலம் தென்பகுதி சிங்களவர்கள் வடக்கிற்கும், வடபகுதி தமிழர்கள் தெற்கிற்கும் சென்று வந்ததுடன், இனங்களுக்கு இடையில் ஐக்கியமும், சகோதரத்துவமும், நாட்டில் ஏற்பட்டு வந்தது. நட்பும் அமைதி நிலவியது.
ஆனால், இன்று யுத்தம் ஆரம்பமாகி சகல மக்களும் பெரும் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர். இந்த அரசு யுத்தத்தை காரணம் காட்டி உணவுப் பொருட்களின் விலைகளை கூட்டிவருகின்றது. பொருளாதாரத் திட்டம் என்று ஒன்று இந்த ஆட்சியில் கிடையாது.
இனப்பிரச்சினைக்கு இந்த அரசினால் தீர்வைக்காண முடியாது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் ஒரு போதும் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியாது. ஐக்கிய தேசியக் கட்சியினால் மட்டுமே இதற்கு தீர்வுகாண முடியும்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று இனவாதக் கட்சிகளான ஜே.வி.பி. மற்றும் சிஹல உறுமய போன்ற கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்துள்ளார்.
கிழக்கைக் கைப்பற்றியதாக அரசு கூறி உள்ளூராட்சி தேர்தலை நடத்தியது. ஆனால், இங்கு ஜனநாயக ரீதியாக தேர்தல் நடைபெறவில்லை. அங்கு ஆயுதம் ஏந்திய குழு ஒன்று தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றது. அதனால்தான் அங்கு எமது கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை. தோட்டத் தொழிலாளர்களின் பிரதான உணவான கோதுமை மாவின் விலையும் அதிகரித்துள்ளது. மானிய விலையில் மா வழங்கப்படும் என்றார்கள்.
தமது பதவிகள் போய்விடும் என்பதால் மலையக தமிழ்க் கட்சிகள் அரசிடம் இதனைப் பற்றிக் கேட்கவில்லை" என்றார்.