*தென்மாகாண கூட்டுறவு அமைச்சர்
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு தென்மாகாணத்தில் உள்ள 34 கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் மலிவான விலையில் சில அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்க தென்மாகாண கூட்டுறவு அமைச்சர் யூ.ஜீ.டீ. ஆரியதிலக நடவடிக்கை எடுத்துள்ளார்.
இப்பொருட்களை இந்தியாவில் இருந்து கப்பல் மூலம் நேரடியாக காலி துறைமுகத்துக்கு தருவிக்கவும் அவர் ஏற்பாடு செய்துள்ளார்.
இந்தியாவில் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இந்திய கூட்டுறவு அமைப்புடன் இது தொடர்பாக பேச்சு நடத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவில் இயங்கும் இந்த கூட்டுறவு அமைப்பு வெளிநாடுகளில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களுக்கு பொருட்களை குறைவான விலையில் அனுப்பிவருகிறது.
பண்டிகைக் காலங்களில் மக்கள் குறைவான விலையில் பொருட்களை வாங்க வேண்டும். இப்பொருட்கள் கிலோ 5 ரூபா குறைவாகவே விற்கப்படும்.
பருப்பு, நெத்தலிக்கருவாடு, வெங்காயம் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களே இந்தியாவில் இருந்து தருவிக்கப்படவுள்ளன.
இப்பொருட்களின் விலைப்பட்டியல்களை சென்னையிலும் புதுடில்லியிலுமுள்ள இலங்கை தூதரகத்தின் மூலம் பெற்றுக்கொண்டதும் 9,500 மெற்றிக்தொன் நிறையுள்ள பொருட்கள் கப்பல் மூலம் தருவிக்கப்படும்.
இந்த நடவடிக்கை வெற்றியளித்தால் எதிர்காலத்தில் இதேபோன்று பல பொருட்களை இந்தியாவில் இருந்து தருவிக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் கூட்டுறவு அமைச்சர் தெரிவித்தார்.