மீராவோடை இராணுவ முகாம் இராணுவத்தினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட திருக்கோவில்- விநாயகபுரத்தைச் சேர்ந்த அந்தோனி பாக்கியராஜா,பாண்டிருப்பு கல்முனையைச் சேர்ந்த தர்மலிங்கம் மோகன் ஆகிய இருவருக்கும் எதிரான குற்றச் சாட்டுக்களைச் சுமத்த போதிய ஆதாரங்கள் இல்லை என பொலிஸார் வாழைச்சேனை நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து இரு சந்தேக நபர்களையும் வாழைச்சேனை நீதிமன்ற நீதிவானும்,மாவட்ட நீதிபதியுமான மாணிக்கவாசகர் கணேசராஜா புதன்கிழமை விடுதலை செய்தார்.
அந்தோனி பாக்கியராஜா கடந்த மாதம் 7 ஆம் திகதியும் தர்மலிங்கம் மோகன் 16 ஆம் திகதியும் அடையாள ஆவணங்கள் இல்லை என்ற காரணத்தால் சந்தேகத்தின் பேரில் படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். பின்னர் வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
தடுத்து வைக்கப்பட்ட இரு சந்தேக நபர்களும் வாழைச்சேனை பொலிஸாரினால் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டிருந்தனர்.
தர்மலிங்கம் மோகன் என்பவருக்கு முழங்காலுக்கு கீழ் உள்ள பகுதி கழற்றப்பட்டுள்ளதாகவும் உறவினர் ஒருவரைப்பார்க்க யாழ்ப்பாணத்தில் இருந்து வந்தபோது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தார்.