* தீர்வை முன்வைக்கும் நிலையில் அரசு இல்லை என்கிறார் சம்பந்தன்
ரொஷான் நாகலிங்கம்
மாகாண சபைகளுக்கு குறைந்தபட்ச அதிகாரங்களே உள்ள நிலையில் அரசாங்கம் அதற்கான அதிகாரங்களை படிப்படியாக அதிகரிக்க வேண்டுமென தேசிய பிரச்சினை மற்றும் 13 ஆவது திருத்தம் தொடர்பாக இடம்பெற்ற கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய சமாதானப் பேரவையால் புதன்கிழமை ஜே.ஆர்.ஜெயவர்த்தன நிலையத்தில் நடத்தப்பட்ட கருத்தரங்கிலேயே இது வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் போது `அடுத்து என்ன?' என்ற புத்தகமும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன், தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெகான் பெரேரா மற்றும் அரச சமாதான செயலகப் பணிப்பாளர் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க ஆகியோர் இதில் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இரா. சம்பந்தன்
இதன் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்களின் தலைவர் இரா. சம்பந்தன் உரையாற்றுகையில்;
"1986 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வரவுள்ளதாகவும் இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணியை பங்கு பற்றுமாறு கோரினார்.
இந்தக் கலந்துரையாடலில் எமது கருத்துகள் வெளிப்படுத்தப்படாமலும் அது 13 ஆவது திருத்தத்தில் வெளிப்படுத்தப்படவில்லை. இதன் போது எமக்கு இந்திய மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் மாகாண சபைகளுக்கு வழங்கப்படுமென்று ஜே. ஆர். ஜெயவர்த்தன எம்மிடம் தெரிவித்தார். அக்காலகட்டத்தில் இந்த மாநில அதிகாரங்கள் போதுமென நாம் கருதினோம்.
ஆனால், 1987 ஆம் ஆண்டு இந்திய- இலங்கை உடன்படிக்கையின் பிரகாரம் செப்டெம்பரில் இந்தத் திருத்தத்தை ஜே.ஆர். பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்ற போதும் எமக்கு கூறியவாறு அதில் எதுவும் வெளிப்படுத்தவில்லை.
இது குறித்து அப்போது இந்திய பிரதமராகவிருந்த ராஜீவ் காந்தியிடம் நாம் எடுத்துரைத்தோம். காத்மண்டுவில் இடம்பெற்ற `சார்க்' மகாநாட்டுக்கு பின்னர் அவர் ஜே. ஆர். ஜெயவர்த்தனவுடன் இது குறித்து பேசிய போது இதனைப் படிப்படியாக முன்னேற்றுவதாக ஜே.ஆர். தெரிவித்தார். எனினும் எதுவும் நடைபெறவில்லை.
சந்திரிகா பண்டாரநாயக்க மேல் மாகாண சபை முதலமைச்சராக வந்த போது `பியோனுக்கு' உள்ள அதிகாரம் தான் தனக்கு உள்ளதாக அவர் தெரித்தார். மக்களும் இதனை ஏற்றுக்கொண்டனர்.
தங்களுக்கு அதிகாரங்களை தருமாறு 50 வருடமாக தமிழ் மக்கள் கோரி வருகின்றனர். இந்நிலையில் 13 ஆவது திருத்தம் தொடர்பில் சந்திரிகா பண்டாரநாயக்க அரசே கூடுதல் அதிகாரங்களை வழங்க முன்வந்தது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எம்மையழைத்து சிறந்த 13 ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்து புதிய விடயங்களை அதில் புகுத்தி நிலையான பயனளிக்கக் கூடிய வகையில் செயற்படுத்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்கு ஆலோசனை முன்வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இறுதியில் நடந்தது என்ன? இதற்கு எதிராகவே இடம் பெற்றுள்ளது. அதாவது, அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு இறுதியில் முன்வைத்த தீர்வில் ஜனாதிபதி எதிர்பார்த்த விடயங்களே ஆலோசனையாக முன் வைக்கப்பட்டது. தற்போதுள்ள 13 ஆவது திருத்தச் சட்டத்தில் சட்டம் ஒழுங்கு உட்பட எந்த பிரிவிலும் திடமாக எவையும் தெரிவிக்கப்படவில்லை என்பதுடன் எதுவும் கிடைக்க கூடியதாகவுமில்லை. 1950 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்த தேர்தல்களில் தமிழர்கள் தமது தாயக பூமியை பாதுகாப்பதற்கு கோரி வந்துள்ளனர்.
தற்போதைய சூழ்நிலையில் அரசு தீர்வினை முன்வைக்கும் போக்கினை காண முடியாத நிலையில் யுத்தத்தை முன்னெடுத்து வருகின்றது. யுத்தம் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. சமாதான முறையிலேயே தீர்வு காண முடியும்" என்றார்.
ஜெகான் பெரேரா
இங்கு தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெகான் பெரேரா உரையாற்றுகையில்;
"விடுதலைப் புலிகளை தள்ளிவிட்டு தமிழ் மக்களுக்கான தீர்வினை முன்வைப்பது புதிய விடயமில்லை. கடற்கோள் இடைக்கால நிர்வாக சபை குறித்து நிர்வாக ரீதியில் பெரியளவில் பேசப்பட்டது. எனினும், நீதிமன்றத்தால் இறுதியில் தடை செய்யப்பட்டது.
சம்பந்தன் கூறியது போல் சந்திரிகா முதலமைச்சராகவிருந்த போது தான் பியோன் மாதிரியிருப்பதாக கூறினார். 13 ஆவது திருத்தத்தை மேற்கொள்ளும் போது கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் உட்பட சகல சமூகங்களுடனும் கலந்துரையாடலை மேற்கொள்வது அவட்சியமானது.
மாகாண சபைக்கு வரவு செலவுத் திட்டத்தில் 5 % நிதியே ஒதுக்கப்படுகின்றது. இது போதுமானதல்ல. கூடுதலான நிதி ஒதுக்கப்பட வேண்டும். ஏனெனில், அம்மக்களுக்கு தேவையான சேவைகளை ஆற்றுவதற்கு முக்கியமான விடயமாகும்.
மாகாண சபைகள் மக்களுக்கு சிறந்த சேவையாற்றுவதற்கு படிப்படியாக போதிய அதிகாரங்களை அரசு வழங்க வேண்டும்" என்றார்.
ரஜீவ விஜயசிங்க
அரச சமாதான செயலக செயலாளர் நாயகம் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க உரையாற்றுகையில்;
"எமக்கு அரசியல் ரீதியான தீர்வு அவசியமானது. அனைத்து தீர்மானங்களும் கொழும்பில் இருந்தே மேற்கொள்ளப்படுகின்ற நிலையில் கிராமங்கள் குறித்து அறிந்து கொள்வதற்கான வாய்ப்பு இல்லை. அதிகாரத்தை பரவலாக்கி மக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
1987 ஆம் ஆண்டு இந்திய- இலங்கை உடன்படிக்கையின் பிரகாரம் வடக்கு- கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டன. இவ்வாறு இணைக்கப்பட்டிருப்பது நாட்டின் இரண்டு பகுதிகள் போல் காணப்பட்டது. இதனை நீதிமன்றம் பிரித்தது. வடக்கு, கிழக்கில் இடைக்கால நிர்வாக சபையில் மாகாண சபை, பிரதேச சபையை தங்களிடம் தாருங்கள் என புலிகள் கோரினர். அங்கு அம்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி புளொட் உட்பட தமிழ், முஸ்லிம் அமைப்புகள் இருந்தன.
விடுதலைப் புலிகள் யுத்தத்தை நிறுத்த மீறியதனாலேயே அரசாங்கம் இதனை வாபஸ் பெற்றது. கிழக்கு உள்ளூராட்சித் தேர்தலில் வன்முறைகள் ஏற்படும் என்றார்கள். ஆனால், அங்கு இடம்பெற்ற தேர்தலில் அம்மக்கள் தமக்கு தேவையான பணியாற்றக் கூடியவர்களை தேர்ந்தெடுத்துள்ளார்கள்" என்றார்.