* விசாரணையில் கண்டுபிடிப்பு
கொறவப்பொத்தானை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட 5 வயதுச் சிறுவன் கடல்கோள் அனர்த்தத்தின் போது காணாமல் போன சிறுவன் அல்ல என்று தற்போது விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மிகிந்தலைக்கு வந்தவர்களுடன் இச்சிறுவன் காணப்பட்டு பின்னர் பொலிஸார் மூலம் விசாரணை செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டார்.
இச்சிறுவனை பராமரித்துவரும் 19 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். இவர் இச்சிறுவனைக் கடத்தி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.
பொலிஸாரால் மேற்கொண்ட விசாரணையில் இச்சிறுவனின் தாயார் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் வேலை செய்பவர் என்றும் சிறுவனை இந்த இளைஞனின் குடும்பத்திடம் ஒப்படைத்துவிட்டு சென்றவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இச் சிறுவன் ஹொறவப்பொத்தனை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது சிறுவன் பற்றிய விபரங்களும் தற்போதுள்ள நிலைமையும் ஆதாரங்களுடன் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சிறுவனை அவர்களிடம் ஒப்படைக்க நீதிமன்றம் அனுமதித்தது.
காலிப்பகுதியில் இடம்பெற்ற கடல்கோள் அனர்த்தத்தின்போது இச்சிறுவனின் பெற்றோர் இறந்துவிட்டதாகவும் சிறுவனை இந்த இளைஞன் கடத்திச் சென்றதாகவும் முதலில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
2004 டிசம்பர் மாதம் இடம்பெற்ற கடல்கோள் அனர்த்தத்தின் போது 200 சிறுவர்கள் காணாமல் போனதாக முறையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.