* திருமலை படுகொலை தொடர்பாக பொலிஸ் அதிகாரி சாட்சியம்
யோ.நிமல்ராஜ்
5பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள காலையில் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்ற நான், காந்தி சிலையருகே இரு வேறு இடங்களிலிருந்த 7 வெற்று ரவைகள் என்னால் மீட்கப்பட்டன.
இவ்வாறு திருகோணமலையில் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாம் திகதி சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஐவர் சம்பந்தமான விசாரணைகள் ஜனாதிபதி ஆணைக்குழுவால் நடத்தப்பட்ட போது சாட்சியம் அளித்த திருகோணமலை துறைமுகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியான ஜனக தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது;
`அன்றைய தினம் மாலை நான்கு மணியளவில் நானும் இன்னும் நான்கு பொலிஸாரும் விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இருவரை கொழும்பில் புலன் விசாரணைப் பிரிவிடம் ஒப்படைப்பதற்காக அங்கிருந்து புறப்பட்டுச் சென்று நான்காம் திகதி இரவு 12 மணியளவில் திருகோணமலையை வந்தடைந்தோம்.
அதனைத் தொடர்ந்து காலை ஏழு மணியளவில் பொலிஸ் நிலையத்தில் கடமையை ஏற்ற நான் எந்தவிதமான விஷேட உத்தரவுமின்றி சாதாரண பொறுப்பதிகாரி என்ற ரீதியில் அச்சம்பவம் தொடர்பான விசாரணையை மேற்கொள்வதற்காக காலை 7.20 மணிக்கு சம்பவ இடத்தை நோக்கி புறப்பட்டுச் சென்றேன்.
அங்கு காந்தி சிலைக்கு அண்மித்த பகுதிகளில் இருவேறு இடங்களிலிருந்து ஏழு வெற்று ரவைகள் என்னால் மீட்கப்பட்டன.
அவற்றை அரச ஆய்வுத் திணைக்களத்திற்கும் அனுப்பினேன்.
இந்நிலையில், காலை ஒன்பது மணியளவில் திரும்பவும் பொலிஸ் நிலையத்திற்கு வந்த போது, நீதிவான் இது தொடர்பான விசாரணைகளுக்காக காந்தி சிலையடிக்கு செல்கின்றார் என்பதை அறிந்து திரும்ப காலை 9.15 மணியளவில் காந்தி சிலையடிக்குச் சென்றேன்.
இதற்கு முன்னர் காலையில் ஏழுமணிக்குக் கடமையைப் பொறுப்பேற்ற போது சவாஹிர் என்னிடம் இச்சம்பவம் தொடர்பாகத் தெரிவித்திருந்தார்.
நான் இப்பொலிஸ் நிலையத்தில் இச்சம்பவம் இடம்பெறுவதற்கு ஆறுமாதத்திற்கு முற்பட்ட காலப்பகுதியிலிருந்தே கடமையாற்றி வருகின்றேன்.
அத்துடன், இது சம்பந்தமான விசாரணைகளுக்காக மூன்றாம் திகதி வரை எவரும் அப்பகுதிக்குச் செல்லவும் இல்லை விசாரணைகளை மேற்கொள்ளவுமில்லை.
வீரக்கொடி என்பவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக எனக்கு எதுவிதமான தகவல்களும் தெரியாது.
அவரின் கொலை எனது காலத்திற்கு முற்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்றிருக்கலாம்.
இதனைத் தொடர்ந்தே விஷேட அதிரடிப் படையினர் இங்கு வருகை தந்ததாகக் கூறப்பட்டாலும் இவர்களின் வருகை தொடர்பாக எனக்கு எவரும் அறிவிக்கவுமில்லை. அத்துடன், எனக்கு வருகிறார்களென்றும் தெரியாது. ஆனால், அவர்களின் நடவடிக்கைகளுக்கு கபில ஜெயசேகர என்பவர்தான் பொறுப்பாக இருக்கிறார் என்று பின்னர் அறிந்து கொண்டேன்.
அத்துடன், இவ்விஷேட அதிரடிப் படையினரில் எத்தனை பேர் வந்தனர். எங்கு தங்கி இருந்தனர் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், அவர்கள் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் கண்டேன்'என நேற்றைய சாட்சியத்தின் போது அவர் தெரிவித்தார்.