-ரொஷான் நாகலிங்கம் -
லிபியாவில் ஒரு இலட்சம் இலங்கையர்களுக்கு தொழில்வாய்ப்பு பெற்றுக் கொடுப்பதற்கான உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்ததுடன் இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வலுப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் பேசுகையில்,
சுகாதாரம் மற்றும் நிர்மாணத்துறை சார்ந்த ஒரு இலட்சம் தொழிலாளர்களுக்கு லிபியாவில் தொழில்வாய்ப்பினை பெற்றுக் கொடுக்கும் முகமாக கடந்த மாதம் அந்நாட்டு தொழில் அமைச்சருடன் நாம் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளோம்.
இந்த ஒப்பந்தமானது இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதன்முதலில் 1976 இல் சிறிமாவோ பண்டாரநாயக்கா லிபியாவுடன் இராஜதந்திர உறவுக்கான உடன்படிக்கையை கடாபியுடன் மேற்கொண்டார்.
எனினும் இந்த உறவுகள் சில காரணங்களுக்காக முழுமை பெறாத நிலையில், தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் காலத்திலேயே இராஜ தந்திர உறவுகள் மீண்டும் வலுப்பெற்று முழுமை பெற்றுள்ளது.
மேற்படி ஒரு இலட்சம் தொழிலாளர்களை லிபியாவுக்கு அனுப்புவதற்கான பொறுப்பினை நாம் முகவர்களுக்கோ உபமுகவர்களுக்கோ வழங்காது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமே மேற்கொள்ளும். ஏனெனில், முறையான பயிற்றப்பட்ட தொழிலாளர்களை அனுப்புவதே எமது நோக்கமாகும்.
இது இவ்வாறிருக்க இத்தொழிலாளர்களை தெரிவு செய்வதற்கான லிபிய தூதுக்குழுவொன்று அடுத்த மாதம் இலங்கைக்கு வருகைதரவுள்ளது. அவர்களே தொழிலாளர்களை தெரிவு செய்வார்கள். இது இவ்வாறிருக்க டுபாய், பஹ்ரேய்ன், கட்டார் ஆகிய இப்பகுதியிலுள்ள நாடுகளில் இலங்கையர்களுக்கு தொழில்வாய்ப்பினை மேலும் பெற்றுக் கொடுப்பதற்கு நான் அங்கு வருகின்ற காலங்களில் விஜயங்களை மேற்கொள்ளவுள்ளேன்.
தற்போது லிபியாவுக்கான பொருளாதாரத் தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு சுகாதாரத்துறை கீழ் மட்டத்தில் உள்ளது. இதனை மேலும் முன்னேற்றுவதற்கு அந்நாடு ஆர்வம் கொண்டுள்ளது. இதன் காரணமாக அதிகளவான சுகாதார துறை சார்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுக்க முடியுமென எதிர்பார்க்கின்றேன்.
அத்துடன் லிபியாவின் சுகாதாரத்துறையை முன்னேற்றுவதற்கு இலங்கை "சுகாதார கிராமமொன்றை" அங்கு அமைத்து பங்களிக்கவுள்ளது. இங்கு பணியாற்றுபவர்கள் முழுவதும் இலங்கையராகவிருப்பர். அங்கு பணிபுரியச் செல்வோருக்கு 3 அல்லது 5 வருட ஒப்பந்தங்களை மேற்கொண்டு அனுப்பவுள்ளோம்.
தென்கொரியாவில் தொழிலாளர் ஒப்பந்தம் நிறைவுபெறவுள்ள நிலையில், மாதம் 29 ஆம் திகதி மீண்டும் புதிப்பிப்பதற்கான ஒப்பந்தத்தினை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மேற்கொள்ளவுள்ளது.
இவ்வாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அதிகரித்து செல்வதனால் எதிர்காலத்தில் ஜனாதிபதி பெண்தொழிலாளர்கள், அனுப்புவதில்லை என்ற நிலைப்பாடுகளுக்கு சாதகமாக அமையும்.
இது இவ்வாறிருக்க மத்திய கிழக்கிற்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் செல்வோருக்கான சம்பளத்தினை குறைந்தது 25 ஆயிரமாக பேணுவதற்கு பேச்சுக்களை மேற்கொண்டுள்ளோம். இதன் மூலம் எதிர்காலத்தில் 15 ஆயிரம் பெற்ற தொழிலாளர்கள் 25 ஆயிரம் ரூபாவை சம்பளமாக பெறுவதால் உள்நாட்டில் வேலை வாய்ப்பின்றி இருப்போர் அதில் நாட்டம் காட்டுவர் இதனால் நாட்டில் தொழில் வாய்ப்பின்றி இருப்போரின் தொகை குறையும் என்றார்.
செய்தியாளர் சந்திப்பின் போது குவைத்தில் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருக்கும் 45 பேருக்கும் மீண்டும் இலங்கை வருவதற்கான விமான டிக்கெட்டினை நவலோக்க நிறுவனத்தைச் சேர்ந்த தர்மதாசா அமைச்சரிடம் கையளித்தார்.