-பி.ரவிவர்மன்-
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் ஜனநாயக தேசியக் கூட்டணி என்ற பொது அமைப்பின் கீழ் போட்டியிடவுள்ளதாக மூன்று தமிழ்க் கட்சிகள் அறிவித்துள்ளன.
தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்-பத்மநாபா) ஆகிய மூன்று தமிழ்க் கட்சிகளுமே இணைந்து தமிழ் ஜனநாயக தேசியக் கூட்டணி என்ற பெயரில் கூட்டமைத்து எதிர்வரும் கிழக்கு மாகாணத் தேர்தலில் போட்டியிடவுள்ளன.
இது தொடர்பாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) த்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவிக்கையில் கூறியதாவது;
தமிழ் ஜனநாயக தேசியக் கூட்டணியில் இணைந்து கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட மூன்று தமிழ்க் கட்சிகள் இணக்கம் கண்டுள்ளன.
அண்மையில் நடைபெற்று முடிந்த மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எம்முடன் இணைந்து போட்டியிட்ட ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) உட்பட ஏனைய தமிழ்க் கட்சிகளுடனும் நாம் தொடர்ந்தும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஒன்றாக இணைந்து போட்டியிடுவது தொடர்பாகப் பல்வேறு கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றோம்.
கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராகத் தமிழர் ஒருவரே நியமிக்கப்பட வேண்டுமென்பதில் நாம் உறுதியாகவுள்ளோம்.
எனவே, கிழக்கின் முதலமைச்சராக தமிழர் ஒருவரே நியமிக்கப்பட வேண்டும். அதுவே நீதியான நியாயமான தீர்வுக்கு வழிவகுக்கும் இல்லையேல், எதிர்காலத்தில் பல்வேறு முரண்பாடுகளையும் சிக்கலான நிலைமைகளையும் தோற்றுவிக்கும்
தமிழர் ஒருவரை எந்தக் கட்சி முதலமைச்சராக நியமிக்குமோ அந்தக் கட்சிக்கு எதிர்காலத்தில் நாம் ஆதரவு வழங்குவோம்.
அதே நேரம் தமிழ் அரசியல் கட்சிகள் தம்மிடையேயான சிறுசிறு அரசியல் முரண்பாடுகளை கைவிட்டு சமூகத்தின் எதிர் கால நலன் கருதி ஒன்றுபட்டு செயல்பட முன்வர வேண்டுமென்று ம் தர்மலிங்கம் சித்தார்த்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.