-யோ. நிமல்ராஜ்-
கேதீஸ்வரன் இறுதியாகத் தனது தந்தையுடன் தொலைபேசியில் உரையாடிய போது மூதூர் நிலைமை மோசமாக இருப்பதால் தனியாக வரமுடியவில்லையென்றும் தமது திருகோணமலை அலுவலகத்தில் கூட்டமொன்று நடைபெறுவதாகவும் அதன் பின்னர் அவர்கள் வந்து கூட்டிச் செல்வார்கள் எனவும் கூறியிருந்தார்.
இவ்வாறு 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அக்ஷன் பாம் ஊழியர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கிய ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;
"நான் தம்பலகாமத்தில் வசிக்கிறேன். மாதவராசா கேதீஸ்வரன் அக்ஷன் பாம் நிறுவனத்தில் ஒரு வருடத்திற்கு மேலாகக் கடமை புரிகின்றார். கேதீஸ்வரனின் தந்தை மாதவராசா தாயார் ஷ்ரீ ரங்கநாயகி. இவர் 1970 ஆம் ஆண்டு பெப்ரவரி பதினேழாம் திகதி பிறந்தார். பல்வேறு பாடசாலைகளில் கல்வி கற்ற இவர் க.பொ.த. உயர்தரத்தில் கணித பாடத்தை படித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சிவில் பொறியியலாளர் கற்கை நெறியை தொடர்ந்திருந்தார். ஆனால், அதனைப் பூர்த்தி செய்யவில்லை.
இந்நிலையில், கமத்தொழிலை செய்து வந்த இவர், முதன்முறையாக அக்ஷன் பாம் நிறுவனத்தில் வெளிக்கள உத்தியோகத்தராகப் பணியில் சேர்ந்தார். அவர் பணியில் சேர்ந்த திகதி எனக்கு ஞாபகமில்லை.
ஆனால், ஒரு வருடத்திற்கு மேலாக அவர் முழுநேர வேலையாளராக இருந்தார்.
அக்ஷன் பாமால் நிர்மாணிக்கப்படும் வீதிகளை மேற்பார்வையிடும் பணியையும் அகதிகளிற்கான உதவிகளையும் இவர் மேற்கொண்டிருந்தார். இவருடைய அலுவலகம் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்தாலும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளிலும் இவர் தனது பணியை மேற்கொண்டதுண்டு.
வழமையில் திங்கட்கிழமை காலை தனது வீட்டிலிருந்து அலுவலகத்திற்குப் புறப்படும் இவர், வெள்ளிக்கிழமை மாலையிலேயே திரும்ப வீட்டுக்கு வருவார்.
சனியும் அவர்களுடைய அலுவலக நாளென்பதால் ஞாயிற்றுக்கிழமையில் தான் அவருடன் கதைக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்.
கூடுதலாகத் தனது மூதூர் அலுவலகத்திலேயே அவர் தங்குவது வழமை.
அலுவலகம் செல்வதற்கு அவர்களது வாகனத்தையே வழமையில் பயன்படுத்துவார்கள். ஆனால், வாகனம் கிடைக்காத பட்சத்தில் வள்ளத்தின் மூலம் கடமைக்குச் செல்வார்.
31 ஆம் திகதி ஜூலை 2006 இல் அவரது வீட்டிற்கு நான் சென்ற போது அன்று தான் அவர் வீட்டிலிருந்து கடமைக்குச் சென்றதாகக் கூறினார்கள். அதனைத் தொடர்ந்து முதலாம் திகதி மூதூர் பிரச்சினை ஆரம்பித்து விட்டதாகப் பரவலான பேச்சுகள் மூலம் அறியக் கூடிய அதேநேரம், வெடிச்சத்தங்களையும் கேட்கக் கூடியதாக இருந்தது. இந்நிலையில் மூதூர் அக்ஷன் பாம் நிறுவனத்தில் பணியாற்றிய பதினேழுபேர் கொல்லப்பட்டிருப்பதாகப் பரவலான பேச்சுகள் பரவின.
இதனை உறுதி செய்வதற்காக திருகோண மலையிலுள்ள அக்ஷன் பாம் அலுவலகத்துடன் தொடர்பு கொண்ட போது அங்கு அதற்குரிய பதிலை எவரும் சரியாகத் தரவில்லை. தரக் கூடிய அதிகாரிகள் அங்கு இருக்கவும் இல்லை. இந்த அலுவலகத்திற்கு நான் ஞாயிற்றுக்கிழமையே சென்றிருந்தேன். அத்துடன், அன்றுதான் இவர்கள் கொல்லப்பட்ட செய்தியும் எனக்குத் தெரியும்.
இதேவேளை, இதனை உறுதிசெய்துகொள்ள மூதூரிற்கு செல்லக்கூடிய நிலைமை அன்றைய சூழ்நிலையில் இல்லை. இதனைத் தொடர்ந்து இவர்களது உடல்கள் திருகோணமலை மருத்துவமனைக்கு எடுத்துவரப்பட்ட பின்னர், அங்கிருந்த மருத்துவர் ஒருவரால் நான் கேதீஸ்வரனின் உடலை அடையாளம் காண்பதற்காக அழைக்கப்பட்டேன்.
அவரது சுருண்ட முடி, பல் மற்றும் அவர் வழமையாகப் பாவிக்கும் சறம் என்பவற்றைக் கொண்டு நான் உடலை அடையாளம் கண்டுகொண்டேன். அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற மரண விசாரணைகளையடுத்து, அன்று பகல் 12.30 மணியளவில் உடல் எம்மிடம் பெட்டியில் வைக்கப்பட்டு அவரது படம் பெட்டியின் வெளிப்புறத்தில் பொருத்தப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.
மருத்துவமனையில் உடல் எம்மிடம் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதனை வீட்டிற்கு எடுத்துச்சென்று அங்கு 45 நிமிடங்கள் மட்டுமே உடலை வைத்திருந்தோம். அதனைத் தொடர்ந்து திருகோணமலை இந்து மயானத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பின்னர் விசாரணைகளுக்காக உடலைத் தோண்டி எடுக்க வேணுமென்றும் அதற்காகப் புதைத்த இடத்தை அடையாளம் காட்டுமாறும் என்னை அழைத்ததன்பேரில் நான் சென்று அடையாளம் காட்டினேன்.
அப்போது அங்கு பொலிஸ், நீதிபதி, மருத்துவர்கள் போன்றோர் பிரசன்னமாகி இருந்தனர். ஆனால், புதைத்த இடத்திலிருந்து பெட்டியை வெளியில் எடுத்துத் திறந்தபோது உடல் அடையாளம் காண இயலாதவாறு சிதைவடைந்திருந்தது. ஆனால், பெட்டியில் அவரது படம் ஒட்டப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து உடல் கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டு பரிசோதனைகள் முடிவடைந்த பின் அவரின் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டு, உடல் புதைக்கப்பட்டது எனக்குத் தெரியும். ஆனால், நான் அவ்விடத்தில் இருக்கவில்லை.
நான் அறிந்தவகையில் அவருக்கு எதிரிகள் எவரும் இருக்கவில்லை. அத்துடன் இராணுவத்தினருடனோ, பொலிஸாருடனோ, விடுதலைப்புலிகளுடனோ தொடர்புகள் வைத்திருக்கவும் இல்லை. அவ்வமைப்புகளுக்கு ஆதரவாகவும் இருந்ததில்லை.
அத்துடன், இச் சம்பவம் நடந்த இடத்திற்கு நான் செல்லவில்லை என்பதால் அதன் சூழல் பற்றி எனக்குத் தெரியாது. அதனால் எதையும் கூறமுடியாது. கேதீஸ்வரன் அங்கு சென்ற பின்னர் தனது தந்தையாருடன் தொலைபேசியில் பேசும்போது மூதூர் நிலைமை மோசமாக உள்ளதால் தனியாக வர இயலவில்லையென்றும் தமது திருகோணமலை அலுவலகத்தில் கூட்டமொன்று நடைபெறுவதாகவும் அதனைத் தொடர்ந்து அவர்கள் வந்து கூட்டிச் செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.
நான்காம் திகதி காலை 9 மணிக்குப் பின்னரே இவர் மாணிக்கராஜா என்பவருடைய வீட்டுக்கு அழைப்பை ஏற்படுத்தி தந்தையாருடன் உரையாடினார். ஆனால், மாணிக்கராஜா குடும்பத்தினர் தற்பொழுது இடம்பெயர்ந்து வன்னிக்குச் சென்றுவிட்டனரெனத்" தெரிவித்தார்.
இத்துடன் நேற்று இவரது சாட்சியம் இடைநிறுத்தப்பட்டு மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.