தமிழர்களை அவமானப்படுத்தும் வகையில் சிங்களப் படம் உருவாக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இராம.நாராயணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
`பிரபாகரன்' என்ற சிங்கள மொழித் திரைப்படத்தை நேற்று வியாழக்கிழமை பார்த்தபின்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் கூறியதாவது;
இந்தப் படம் கலர்ப்படம் அல்ல கலப்படம். படத்தின் தலைப்பே சரியில்லை. தமிழர்களை அவமானப்படுத்தக்கூடியது. திரையிடுவதற்காக வெளியிடுவதை அனுமதிக்க முடியாது. இது குறித்து தீவிரமாக ஆராயவேண்டியுள்ளது என்றார்.
நடிகர் சத்யராஜ் கருத்துத் தெரிவிக்கையில்;
தமிழர்களை அவமதிக்கும் படம் இது. வன்மையாக இப்படத்தை கண்டிக்கிறோம் என்றார்.
பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் கூறியதாவது;
படத்தின் தொடக்கத்தில் இலங்கை அரசுக்கும் பாதுகாப்பு அமைச்சிற்கும் நன்றி என்று இடம்பெறுகிறது. அத்துடன், படத்தில் ஒரு காட்சியில் கூட ஒரு படைத் தளபதியோ படையைச் சேர்ந்தவரோ இடம்பெறாமையிலிருந்தே இந்தப் படத்தின் நோக்கம் தெரிய வருகின்றது. இலங்கையில் தமிழர்களை படைதான் ஒடுக்கி அடக்கி வருகிறது. ஆனால், வரலாற்றையே தலைகீழாய் மாற்றி சிங்கள மக்கள் பாதிக்கப்படுவது போல் சித்திரிப்பது ஒரு பெரிய மோசடி. மேலும், சமாதான நடவடிக்கைகளை போலி சமாதானம் என்று இப்படத்தில் நிராகரித்திருப்பதன் மூலம் படம் எடுத்தவரின் நோக்கம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இயக்குனர் சீமான் கூறுகையில்;
"தமிழர்களைக் கொச்சைப்படுத்தும் சிங்களப் படத்தை தடுக்கின்ற போது படைப்புச் சுதந்திரம் பற்றி சிலர் பேசுகின்றனர். `காற்றுக்கென்ன வேலி' திரைப்படம் தடுக்கப்பட்ட போது படைப்புச் சுதந்திரம் பற்றிப் பேசினார்களா? தமிழர்களை இழிவுபடுத்தும் போது தான் படைப்புச் சுதந்திரம் பற்றிப் பேசுவார்களா" என்றார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமா, கவிஞர்கள் மு.மேத்தா, பொன். செல்வகணபதி, தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தமிழின உணர்வாளர்கள் முன்னிலையில் இப்படம் காண்பிக்கப்பட்டது.