* மொறட்டுவையில் வசித்த வீடும் சீல் வைப்பு
மொறட்டுவையில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று பட்டதாரி மாணவர்கள் வெள்ளை வானில் சிவில் உடையில் வந்தவர்களால் அழைத்துச்செல்லப்பட்டதை அடுத்து, அவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளார்கள் என்று அறியமுடியாதுள்ளதாக உறவினர்களும் நண்பர்களும் பிரதி அமைச்சர் பெ.ராதாகிருஸ்ணனிடம் புகார் செய்துள்ளனர்.
மட்டுவிலைச் சேர்ந்த தம்பாப்பிள்ளை கஜன், அளவெட்டியைச் சேர்ந்த கணேசன் செல்வரஞ்சன், வடமராட்சியைச் சேர்ந்த சிவலிங்கம் ஆரூரன் ஆகிய மூன்று பட்டதாரி மாணவர்களே இவ்வாறு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.
மேற்படி மாணவர்கள் மூவரும் பட்டப் படிப்பை முடித்துவிட்டு வெளிநாடு செல்வதற்கு ஏற்பாடு செய்துகொண்டிருந்தாகவும், கடந்த 24 ஆம் திகதி இரவு ஏழு மணியளவில் வெள்ளை நிற வானில் சிவில் உடையில் வந்தவர்கள் இவர்கள் தங்கியிருந்த தொடர்மாடி வீட்டை பூட்டி சீல் வைத்து விட்டு மூன்று மாணவர்களையும் வானில் ஏற்றிச் சென்றதாகப் புகாரில் கூறப்பட்டுள்ளது.
கஜன் பட்டயக்கணக்குப் பயிற்சி செய்பவர் என்றும் இரண்டு வாரங்களில் செல்வரஞ்சன் லண்டன் செல்வதற்கு கல்வி விசா பெற்றுள்ளதாகவும் ஆரூரன் எம்.எஸ்.ஸி பட்டப்படிப்பு மேற்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இவர்கள் கைதானார்களா? அல்லது கடத்தப்பட்டார்களா? என்று அறியமுடியாமல் இருப்பதாகவும் நீண்ட காலமாக இப்பகுதியில் வசித்து மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்ததாகவும் இவர்களின் பெற்றோர்களில் ஒருவரான தம்பாப்பிள்ளை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், பாணந்துறை கெசல் வத்தைப்பகுதியில் தாயுடன் வசித்து வந்த இளைஞரான ராஜேந்திரன் பிரதீப்குமார் (வயது 27), கொழும்பு கடற்கரைப்பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தாயாரான ராஜேந்திரன் ராஜேஸ்வரி பிரதி அமைச்சரிடம் புகார் செய்துள்ளார்.
மேற்படி இளைஞர் கணினித் தொழில் புரிபவர் என்றும் பிறந்தது முதல் பாணந்துறைப் பகுதியிலேயே வசித்து வருவதாகவும் எதுவிமான குற்றச்செயல்களிலும் ஈடுபடாதவர் என்றும் தந்தையார் ராஜேந்திரன் கட்டார் நாட்டில் கணக்காளராகப் பணிபுரிவதாகவும் தாயார் மேலும் தெரிவித்ததுடன், தனது மகனை விடுவித்துத் தருமாறும் கேட்டுள்ளார்.
மொறட்டுவை மாணவர்கள் தொடர்பாகவும் பாணந்துறை இளைஞர் தொடர்பாகவும் பிரதி அமைச்சர் பயங்கரவாத தடுப்புப் பிரிவு இயக்குனர் நந்தன முனசிங்கவுக்கு அறிவித்துள்ளார்.