பண்டாரவளை பொலிஸ் பிரிவில் உள்ள மாப்பிட்டிய கற்குழியில் வெடி வைத்தபோது மூவர் படுகாயமடைந்து பதுளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பூனாகல புரோட்டன் தோட்டத்தைச் சேர்ந்த எஸ்.சிவநாதன், ஞானசம்பந்தன் மற்றும் பூனாகல 9 ஆம் கட்டை டி.எம்.ரூபசிங்க ஆகியோரே படுகாயமடைந்தவர்களாவர். மேற்படி கற்குழி தொழிலாளிகளான இவர்கள் கல்லுக்கு வெடிவைத்தபோதே, படுகாயமடைந்துள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை, இவ்விடத்தில் வெடிவைப்பதையோ கற்கள் உடைப்பதனையோ மேற்கொள்ள வேண்டாமென பெருமளவில் பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அது கைவிடப்பட்டிருந்ததாக மலையக மக்கள் முன்னணியின் தொழிலுறவு அதிகாரி பி.எஸ்.தயானந்த தெரிவித்திருந்தார். எனினும், பிரதேச மக்களினது எதிர்ப்பையும் பொருட்படுத்தாது கல்லுடைக்க அனுமதி வழங்கப்பட்டதாலேயே இவ்விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்குமவர் உடனடியாக அவ்விடத்தில் கல்லுடைப்பதையும் வெடி வைப்பதையும் தடுத்துநிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பண்டாரவளை பிரதேச செயலாளர் சுற்றாடல் அமைச்சிடம் கேட்டுள்ளார்.