* பிரதியமைச்சரிடம் புகார்
கடந்த ஐந்து வருடங்களாக கொழும்பில் வசித்து வந்த கிளிநொச்சி முரசுமோட்டையைச் சேர்ந்த 31 வயது பெண்ணை பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக தாயார் மலையக மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் வாழ்க்கைத் தொழில் தொழில்நுட்ப பயிற்சி பிரதி அமைச்சருமான பெ.இராதாகிருஷ்ணனிடம் புகார் செய்துள்ளார்.
மோதரை வீதியில் 2003 ஆம் ஆண்டு முதல் வசித்து வந்த கணபதிப்பிள்ளை தர்ஷனி (31 வயது) என்ற பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளதாக தாயாரான தங்கரத்தினம் கணபதிப்பிள்ளை பிரதி அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.
தனது மகள் 8.12.2003 இல் கொழும்பில் கனடா மாப்பிள்ளையை திருமணம் முடித்து வெளியூர் செல்வதற்காக கொழும்பில் தங்கியிருந்ததாகவும் அவரிடம் சகல ஆவணங்களும் இருப்பதாகவும் தெரிவித்த தாயார், தனது மகள் கலவானைப் பகுதியைச் சேர்ந்த பிரபாத் என்ற வெளிநாட்டு முகவரிடம் பணம் செலுத்தி ஏமாற்றமடைந்ததாகவும் அண்மையில் கைது செய்யப்பட்ட பிரபாத் 35 பேரிடம் பண மோசடி செய்திருப்பதாகவும் தற்போது 7 பேர் மாத்திரமே பணம் கேட்டு, அது தொடர்பான வழக்கு நடைபெறுவதாகவும் எதிர்வரும் 01.04.2008 இல் வழக்கு நடைபெற இருக்கும் நிலையில், தனது மகள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தர்ஷனி தங்கியிருந்த வீடுகள் சோதனையிடப்பட்டதாகவும் கடைசியாக அவர் தங்கியிருந்த அறையை வாடகைக்குப் பெற்றுக் கொடுத்த கொழும்புப் பெண்ணையும் மோதரை பொலிஸார் விசாரித்துள்ளதாகவும் பிரதி அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது. கிளிநொச்சியில் பிறந்த அடையாள அட்டையை கொழும்பில் வசிப்பதால் கொழும்பு விலாசமிட்டு எடுத்துள்ளதாகவும் இது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட பிறகே புதிய அடையாள அட்டையை தனது மகள் பெற்றுக் கொண்டதாகவும் அவரது சகோதரி வெளிநாடு செல்வதற்கும் செலவுக்கும் தர்ஷனிக்கு பணம் அனுப்பி விடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தர்ஷனி தொடர்பாக பயங்கரவாத தடுப்புப் பிரிவு இயக்குநர் நந்தன முனசிங்கவுடன் பிரதி அமைச்சர் தொடர்பு கொண்டுள்ளார்.