பசறைப் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மது போதையில் பெருந்தோட்ட குடும்பப் பெண்ணொருவர் மீது தகாத முறையில் நடக்க முயற்சித்தமை தொடர்பான உயர் மட்டப் பொலிஸ் விசாரணை எதிர்வரும் 30 ஆம் திகதி பதுளை பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
இவ்விசாரணையின் போது அவமானத்திற்குள்ளான பெருந்தோட்ட குடும்பப் பெண் உட்பட அதற்கான சாட்சியாளர்களையும் ஆஜராகுமாறு பதுளைப் பிரதேசப் பொலிஸ் அதிகாரி மகிந்த பால சூரிய அழைப்பாணைகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பியுள்ளார்.
இது பற்றிக் கூறப்படுவதாவது; பசறைப் பகுதியைச் சேர்ந்த தென்னகும்பறை மத்திய பிரிவுத் தோட்டத் தொழிலாளியான வி. விஜயகுமாருக்கெதிரான புகாரொன்றை விசாரணை செய்யச் சென்ற பசறைப் பொலிஸ் நிலையத்தின் இலக்கம் 54290 இலக்கம் 24299 ஆகிய பொலிஸார் அங்கு விஜயகுமார் என்ற சம்பந்தப்பட்டவர் இல்லாததால் அவரின் மனைவியான எஸ். ஷ்ரீயானியிடம் தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன், தகாத முறையிலும் அப் பொலிஸார் நடக்க முயன்றுள்ளதாகவும் அவ்வேளையில் பொலிஸார் மதுபோதையில் இருந்ததாகவும் அவமானத்திற்குள்ளான பெண் ஊவா மாகாண சபை உறுப்பினர் அ.அரவிந்குமாரிடம் புகார் செய்துள்ளார்."
மேலும், இப்பொலிஸார் மேற்குறிப்பிட்ட பெண்ணின் அயல் வீட்டுப் பெண் மீதும் தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.
இது குறித்து ஊவா மாகாண சபை உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் மாகாணப் பொறுப்பாளருமான அ. அரவிந்குமார் பொலிஸ் மா அதிபர் , ஊவா மாகாண பிரதிப் பொலிஸ் அதிபர், பதுளை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிபர், பசறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோருக்கும் புகார் செய்துள்ளார். அப்புகாரின் அடிப்படையிலேயே மேற்படி விசாரணைகள் இடம்பெறவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.