வடபகுதிக்கான போக்குவரத்துத் தடையை நீக்க மறுத்துள்ள பாதுகாப்பு தரப்பினர், வவுனியாவுக்கும் மதவாச்சிக்கும் இடையில் விசேட பஸ் சேவைகளை நடத்த இணக்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.சிவநாதன் கிஷோர் வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருடன் நடத்திய சந்திப்பையடுத்தே இந்த ஏற்பாட்டுக்கு பொலிஸார் இணக்கம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
தென்பகுதிக்குச் செல்லும் பயணிகள் வவுனியா பஸ் நிலையத்திலும் வேறு மூன்று இடங்களிலும் பஸ்ஸைவிட்டு இறக்கி கடும் சோதனைக்குப் பின்னரே பயணத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் பயணிகள் பெரும் அசௌகரியத்திற்குள்ளாகின்றனர்.
இதனைத் தவிர்க்க வவுனியா பஸ் நிலையத்தில் பயணிகள் சோதனையிடப்பட்ட பின்னர் பொலிஸ் காவலுடன் பயணிகள் மதவாச்சிக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். இத்திட்டம் விரைவில் அமுலாக்கப்படுமென வன்னி மாவட்ட எம்.பி.சிவநாதன் கிஷோர் தெரிவித்துள்ளார்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருடன் வன்னி எம்.பி.கிஷோர் நடத்திய கலந்துரையாடலில் பயணிகளை ஏற்றச் செல்லும் பஸ் வவுனியாவிலிருந்து புறப்பட்டு மதவாச்சியிலேயே நிறுத்தப்படுமென்றும் வேறு எங்கும் தரித்து நிற்காதெனவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் மதவாச்சி ரயில் நிலையத்திற்கு கொழும்பு கோட்டையிலிருந்து வரும் ரயில் பயணிகள் அனைவரும் பதிவு செய்யப்பட்ட பின்னரே வெளியே செல்லப் பொலிஸார் அனுமதிக்கின்றனர். இரு பொலிஸாரே பதிவுகளை மேற்கொள்வதால் நீண்டநேரம் கால்கடுக்கக் காத்திருந்து பயணிகள் பதிவுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இது குறித்தும் வன்னி எம்.பி.வட மத்திய மாகாணப் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்குக் கொண்டுவந்தபோது, கூடுதல் பொலிஸாரை பணிக்கு அமர்த்தி பதிவுகளை விரைவாக மேற்கொள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.