தமிழ் மக்களை கௌரவமாக இலங்கை நடத்த வேண்டுமென இந்தியா விரும்புவதாக தெரிவித்திருக்கும் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், கொழும்பின் ஆயுதக் கொள்வனவு தொடர்பாகவும் கவலை தெரிவித்திருக்கிறார்.
யுத்த நிறுத்தம் சீர்குலைந்ததால் ஏற்படும் நிலைமையை நாம் எதிர்கொண்டுள்ளோம். இதுவொரு முக்கியமான கட்டத்துக்கு இட்டுச்செல்லும் என்றும் அவர் கூறியுள்ளார்.
புதுடில்லியில் 25 ஆவது விமானப் படைத் தளபதி பி.சி.லாலின் நினைவுப் பேருரையை கடந்த புதன்கிழமை ஆற்றிய நாராயணன், தமிழ் சிறுபான்மையினரை கௌரவத்துடன் இலங்கை அரசாங்கம் நடத்த வேண்டுமென நாம் விரும்புகின்றோம் என்று கூறியுள்ளார்.
ஆனால், (இலங்கை) அரசாங்கம் எந்தவொரு அதிகாரப் பகிர்வுமின்றி இராணுவ வெற்றியென்ற ஒரே நோக்கத்தை கொண்டதாகவே தென்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிராந்தியத்தில் இந்தியா கொண்டிருக்கும் முன்னணியான நிலைமையை நாம் உறுதிப்படுத்த வேண்டியிருக்கிறது. இலங்கை வேறெங்கும்
ஆயுதக் கொள்வனவு மேற்கொள்வதற்காக செல்வதை விட்டுக்கொடுக்க முடியாது. எவ்வளவுக்கு நாம் (இராணுவ) உதவியை வழங்கவேண்டும் என்றும் எவ்வளவு தூரம் நாம் (இலங்கை) அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பது பற்றியும் தேசிய கருத்தொருமைப்பாடு எமக்குத் தேவையானதாகும் என்றும் நாராயணன் கூறியுள்ளார்.
இனநெருக்கடிக்கு இராணுவத் தீர்வு காண்பதை எதிர்த்து வரும் இந்தியா சிறுபான்மையினருக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்குமாறு வலியுறுத்தி வருகிறது.
அதேசமயம் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கும் இந்தியா பயிற்சி அளித்து வருகின்றது. ஆயினும் நாசகார ஆயுதங்களை வழங்குவதற்கு மறுத்திருக்கிறது.