அம்பாறை மத்திய முகாம் அந்தஓயா பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற சம்பவமொன்றில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மத்திய முகாம் அந்தஓயா பூச்சிக்குடி பகுதியில் மணல் ஏற்ற லொறி ஒன்றில் வந்தவர்கள் மீதே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதில், வாகனச் சாரதியும் தொழிலாளி யொருவரும் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர். மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் பின்னர் அம்பாறை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவத்தில் வாகனச் சாரதியான ஜெயசிறி வீரகொட, கபில ரஞ்சித்குமார (கண்டி) ஆகிய இருவரும் கொல்லப்பட்டதுடன், யு. டபிள்யூ.பி.அருண ருவான்குமார (வெலிகம, கண்டி) என்பவரே படுகாயமடைந்தவராவார்.
இந்தச் சம்பவத்தையடுத்து அப்பகுதிக்கு வந்த விஷேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டனர்.