வன்னியில் விமானப் படையினர் மேற்கொள்ளும் வான்தாக்குதலில் சீனாவின் `எவ்-7' ரக விமானங்களும் இணைந்துள்ளன.
வன்னியில் நேற்று வியாழக்கிழமை காலை இரு இடங்களில் இந்த விமானத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்தத் தாக்குதல்களில் இஸ்ரேலிய கிபிர் விமானங்களுடன் சீனத் தயாரிப்பு எவ் -7 ரக விமானங்களும் ஈடுபட்டிருந்தன.
விடுதலைப் புலிகளின் பயிற்சி நிலையங்கள் மீதும் ராடர் நிலையங்கள் மீதுமே இவ்விரு தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளதாக விமானப் படை பேச்சாளர் விங்கொமாண்டர் அன்றூ விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
நேற்றுக் காலை 6.25 மணியளவில் இரணைமடு கல்மடு பகுதியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், புலிகள் தங்களுக்கான ஆட்சேர்ப்புக்கு இந்த நிலையத்தை பயன்படுத்தி வருவதாகவும் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிப்பதாக அவர் தெரிவித்தார்.
மற்றைய தாக்குதல் நேற்றுக் காலை 6.35 மணியளவில் பூநகரிக்கு தெற்கே வலைப்பாடு பகுதியில் நடைபெற்றுள்ளது. புலிகளின் ராடர் கட்டளை நிலை மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நன்கு இனங்காணப்பட்ட பின்னரே `கிபிர்' மற்றும் `எவ்-7' ரக விமானங்கள் இவற்றை தாக்கி அழித்ததாகவும் விங்கொமாண்டர் விஜேசூரிய தெரிவித்தார்.