* மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
திபெத் நெருக்கடி தொடர்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவை தீர்வு காணவேண்டும் என்று மனித உரிமைகளுக்கான கண்காணிப்பகம் (Human frights watch) வலியுறுத்தியிருக்கும் அதேவேளை, ஐ.நா.வில் இது தொடர்பாக விவாதிப்பதை இலங்கை, அல்ஜீரியா, கியூபா, பாகிஸ்தான், சிம்பாப்வேயின் ஆதரவுடன் சீனா தடுத்துவிட்டது.
திபெத்தில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலை குறித்து உலகின் கவனம் திரும்பியுள்ளது. ஆகஸ்ட்டில் ஒலிம்பிக் போட்டிகள் சீனாவில் இடம்பெறவுள்ளதால் திபெத் கிளர்ச்சி தொடர்பாக சீனா எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது என்பதை சர்வதேசம் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றது.
அஞ்ஞாத வாசமிருக்கும் திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளுமாறு
அமெரிக்க ஜனாதிபதி புஷ் சீன ஜனாதிபதி ஹு ஜிந்தாவோவை கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆனால், ஒலிம்பிக் போட்டிக்கு இடையூறு விளைவிப்பதை நோக்கமாகக் கொண்டு இடம்பெற்றுவரும் சட்டவிரோத நடவடிக்கைகள், வன்செயல்களை நிறுத்த வேண்டுமெனவும் திபெத் மற்றும் தாய்வானுக்கான ஆதரவை தலாய் லாமா நிறுத்திவிட வேண்டுமெனவும் ஜிந்தாவோ கூறியிருக்கிறார்.
அவுஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா ஆகியன ஐ.நா. மனித உரிமை பேரவை அமர்வின்போது திபெத் நெருக்கடி விவகாரம் குறித்தும் அங்கு இடம்பெறும் துஷ்பிரயோகங்கள் தொடர்பாகவும் கேள்வி எழுப்பியதாகவும் ஆனால், இலங்கை, சிம்பாப்வே, கியூபா, பாகிஸ்தான், அல்ஜீரியா ஆகியவற்றின் ஆதரவுடன் விவாதத்தை சீனா தடுத்துவிட்டதாகவும் மனித உரிமை கண் காணிப்பகம் குற்றம் சாட்டியுள்ளது.
திபெத் நெருக்கடி தொடர்பாக தீர்வு காண்பது மனித உரிமை பேரவையின் உரிமை மட்டுமல்ல, கடப்பாடும் கூட என்று மனித உரிமை கண்காணிப்பக பணிப்பாளர் ஜுலியற்றி டி ரிவெய்ரோ ராய்ட்டருக்கு தெரிவித்துள்ளார்.