* இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்திய தளபதி தெரிவிப்பு
இலங்கை கடற்பகுதியில் வைத்து தமிழக மீனவர்கள் சுடப்படுவதை தம்மால் தடுத்து நிறுத்த முடியாதெனத் தெரிவித்துள்ள இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்திய தளபதி வைஷ் அட்மிரல் ராமன் பிரேம் சுதன், இந்தியக் கடற்பகுதியில் விடுதலைப் புலிகளின் எவ்விதமான நடமாட்டங்களும் இல்லையெனவும் கூறினார். பாக்கு நீரிணை, பாக்.வளை குடா மற்றும் மன்னார் வளை குடாவையொட்டியுள்ள சர்வதேச கடல் எல்லைகளை சென்று பார்வையிட்ட பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறிய கிழக்கு பிராந்திய தளபதி மேலும் கூறியதாவது,
இந்திய கடல்பகுதியில் தமிழக மீனவர்கள் எவர்மீதும் துப்பாக்கிச் சூடுகள் நடந்ததில்லை. ஆனால் தமிழக மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடற்பகுதிக்குள் செல்லும் போது அவர்கள் சுடப்படுவதை எம்மால் தடுக்க முடியாது.
இந்திய கடற்பகுதிக்கும் எமது மீனவர்கள் மீன்பிடிக்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் இந்திய கடற்படை மேற்கொண்டுள்ளது. எம்முடைய பகுதியில் வைத்து எமது மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதற்கு நாம் ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம். ஆனால் எமது கடல் எல்லையை தாண்டிச் சென்றால் எம்மால் எதுவும் செய்ய இயலாது.
இலங்கை கடற்படை அந்நாட்டின் சொத்துக்களை பாதுகாப்பதற்காக அவர்களின் கடற்பகுதியில் சில பாதுகாப்பு வலயங்களை அறிவித்துள்ளது. அப்பகுதியில் மீன்பிடிக்க அந்நாட்டின் மீனவர்களே அனுமதிக்கப்படுவதில்லை.
நிலைமை இவ்வாறிருக்கும் போது விதி முறைகளை மீறி எம்முடைய மீனவர்கள் அங்கு மீன்பிடிக்கச் சென்றாலே துப்பாக்கிச் சூட்டை சந்திக்க வேண்டியேற்படுகின்றது. எனவே இந்திய மீனவர்கள் கடல் எல்லை தாண்டிச் செல்வதை முடிந்த வரை கட்டுப்படுத்த முயல்கிறோம்.
கடற்புலிகளின் நடமாட்டம் எம்முடைய கடற்பகுதியில் இல்லை. இலங்கை கடற்பகுதியில்தான் அவர்கள் செயற்படுகின்றார்கள். இந்திய கடற்படையோடு கடற்புலிகள் நேரடியாக மோதுவார்கள் என்று நான் நினைக்கவில்லை.