* ஜனவரியில் 610.8 மில்லியன் டொலர்
இலங்கையின் வர்த்தக நிலுவை பற்றாக்குறை இரண்டு மடங்காக கடந்த ஜனவரியில் அதிகரித்திருப்பதாக மத்திய வங்கி நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
ஆடை, தேயிலை ஏற்றுமதித்துறைகள் மூலம் அதிகமான அளவு அந்நியச் செலாவணியை பெற்ற போதும் எரிபொருள் இறக்குமதிச் செலவினம் கடந்த ஜனவரியில் அதிகளவாக உயர்ந்ததால் வர்த்தக நிலுவை 610.8 மில்லியன்டொலராக அதிகரித்திருப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் (2007) ஜனவரியில் 298.5 மில்லியன் டொலராக இருந்த வர்த்தக நிலுவைப் பற்றாக்குறை இந்த வருட ஜனவரியில் 104.6 சதவீதத்தால் அதிகரித்திருப்பதை மத்திய வங்கியின் புள்ளிவிபர அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரியில் 301.1 மில்லியன் டொலர் பெறுமதியான எரிபொருட்களை இலங்கை இறக்குமதி செய்துள்ளது. கடந்த வருடம் 54.2 மில்லியன் டொலர் பெறுமதியான எரிபொருட்களை இறக்குமதி செய்திருந்தது. மொத்த எரிபொருள் இறக்குமதி செலவினம் 49.2 சதவீதத்தால் 1.2 பில்லியன் டொலர்களாக கடந்த ஜனவரியில் உயர்ந்துள்ளது.
ஆனால், ஏற்றுமதி மூலம் வருமானம் 15.4 சதவீதமே கூடியுள்ளது. ஆடை ஏற்றுமதி வருமானம் 4 சதவீதமே அதிகரித்திருக்கிறது. தேயிலை ஏற்றுமதி 46.0 சதவீதமாக 90.8 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.
தேயிலைக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. 3.83 டொலர்களாக 1 கிலோ தேயிலை கடந்த ஜனவரியில் விற்பனை செய்யப்பட்டது.
இதேவேளை, கடந்த ஜனவரியில் விவசாய இறக்குமதிகளுக்கு அதிகளவு தொகையை இலங்கை செலுத்தியுள்ளது. அரிசி, கோதுமை என்பனற்றின் விலை அதிகளவுக்கு கடந்த வருடத்தை விட உயர்ந்துள்ளன.